Friday, November 09, 2007

இடைவெளி

வாய் மூடாது பேசுகிறார்
பள்ளிப் பருவ நண்பனுடன்
உணவகத்தில்

மடியில் வாய் மூடாதுள்ளது
அவர் பிள்ளை.

ஊட்டுவதற்காக அவர் வைத்துள்ள
கப் ஐஸ்க்ரீம் கரண்டிக்கும்
பிள்ளையின் வாய்க்கும்
இடைப்பட்ட சந்தில்
வார்த்தைகளாய்
வழிந்தோடுகிறது
நண்பர்களின் பிள்ளைப் பருவம்.

வெகுதூரம் பின்னோக்கி
நகர்ந்துவிட்ட அப்பாவின்
கையிலுள்ள ஐஸ்க்ரீமை நோக்கி
நகர்த்திக்கொண்டேயுள்ளது
பிள்ளை
இன்னும் உலரத் தொடங்காத
தன் பிஞ்சு வாயை!

-14.11.2007 ஆனந்த விகடன் இதழில் வெளியானது

Thursday, October 25, 2007

தள்ளிக் கொண்டு

குழந்தை நிரம்பிய
குட்டி வண்டியைத்
தள்ளிக் கொண்டு சில
தாய்மார்களும்

குப்பை நிரம்பிய
பெட்டி வண்டிகளைத்
தள்ளிக் கொண்டு சில
தொழிலாளர்களும்

வயதானவர் நிரம்பிய வண்டிகளைத்
தள்ளிக் கொண்டு சில
பணிப்பெண்களும்

விடுமுறைச் சுற்றுலாவுக்கு
வேறு நாடுகளுக்கு
பிள்ளைகளையும் பயணப் பெட்டிகளையும்
தள்ளிக் கொண்டு
குடும்பத் தலைவர்களும்

மாத்திரை கொடுத்தோ
வார்த்தைகள் கொடுத்தோ
வயிற்றில் கொடுத்தோ
தள்ளிக் கொண்டு வந்த
பள்ளிச் சிறுமியைக்
கட்டியணைத்தபடி ஒருகடுக்கன் காரரும்

ஆர்ஸனல் மேன்யூக் கனவுகளை
காலால் தள்ளிக் கொண்டு சில
பந்தாட்டச் சிறுவர்களும்

எதிர்த்த சாப்பாட்டுக் கடையிலிருந்து
பர்மிட்டில்லாக் கையில்
கரண்டி பிடித்து
தள்ளிக் கொண்டிருந்த
மீகொரிங்கைப் போட்டுவிட்டு
நாலாபுறமும் பாய்ந்து எகிறியோடுவோரும்
மாட்டியோரைக் குப்புறத் தள்ளிப்
புறமுதுகில் கைவிலங்கிட்டு
நெட்டித் தள்ளிக் கொண்டு சில
ஊதாச் சீருடைக் காவலரும்

ஒரு பழுப்புப் பூனையைத் தள்ளிக் கொண்டு
ஒருகருப்புப் பூனையும்

போய்க் கொண்டிருக்கிறார்கள்
காற்று தள்ளிக் கொண்டிருக்கும்
என் ஜன்னலின்
திரைச்சீலைக்குப் பின்னால்
வேலை கிடைக்கவில்லையென
வெட்டியாய் ஒரு நாளைத்
தள்ளிக் கொண்டு
வேடிக்கை பார்த்திருக்கும்
என்னைக் கடந்து...

வெட்டு

கூலிக்கி பதிலா
சம்பளம் கிடைச்சென்ன
பதிலுக்குக் கூலியா
பிய்யாரும் கிடைச்சென்ன?

ஐநூறு வெள்ளியாச்சும்
மினிமம் கிடக்கணுமாம்
கிடக்கிறதுக்கா உழைக்கிறது
அமயஞ்சமயத்துக்கு எடுத்துப்புட்டா
ரெண்டு வெள்ளி வெட்டிருது ஏட்டியெம்மு

ஓர்ச்சர்ட்டு ரோட்டுப் பக்கம்
லோரியத் திருப்பிப்புட்டா
திருப்பத்துக்கொண்ணா அது
விருப்பத்துக்கு வெட்டுது ஈயார்ப்பீ

ஏறும் போது தட்டிப்புட்டு
எறங்கும் போது மறந்துப்புட்டா
மொத்தமா வெட்டுது ஈஸிலிங்கு

உருப்படியா ரெண்டு
ஓவர்டைம் கிடைச்சா
அதுலயும் வெட்டுது சீப்பியெ·ப்பு

வெட்டாமக் கிட்டாம
சுளுவாப் பொறந்ததுக்கே
தங்கமாக் கொட்டணும்
தங்கச்சி மகனுக்கு...

நம்மால முடிஞ்சதுக்கு
மாமஞ் சீருக்கு
மோதிரம் வாங்கப்போனா
அஞ்ச வெட்டுது ஜீயெஸ்ட்டி

வந்து சேந்துச்சானு போனடிச்சா
மெல்லிசா இருக்காம் மோதிரம்...
லைன வெட்டுது தங்கச்சி

சிங்டெல்லு ஸ்டார்ஹப்பு
கரண்ட்டு கேபிளு
தண்ணிக்கி குப்பைக்கி
லொட்டுக்கு லொசுக்குக்குனு
பட்டுப்பட்டுனு வெட்டுது ஜைரோ

ஜீரோவுல கூட நிக்கல
மைனஸ்ல ஓடிக்கிட்டிருக்கு மாப்ள!

கிணத்த வெட்டணும்
கம்மாய வெட்டணுன்னு
கடுதாசி வந்திருக்குன்னு
அவசரமா அனுப்பணுன்னு
கைமாத்துக் கேட்டுப்புட்ட

குடுக்காமயா போயிருவம்?
நாளைக்கே...
நாலு நம்பர் அடிச்சுப்புட்டா!

Wednesday, October 17, 2007