அம்மாஆஆஆ... ஆ...
அவ அலறுனா.
படார்னு கதவத் திறந்துக்கிட்டு ஓடி வரலை யாரும். அவ அலறுனது வெளியில கேக்கலபோல. மறுபடியும் கத்தப் பிரயத்தனப்பட்டப்பத்தான் அவளோட தொண்டைக்கு அவ்வளவு பக்கத்துல இருந்த அவளோட காதுக்கே தொண்டை அலறுனது கேக்கலைன்னு அவளுக்குப் புரிஞ்சிச்சு. க்ரேன் எழும்புற மாதிரி கைகளத் தூக்கிக்கிட்டு வந்து, தண்ணிக்குள்ள முக்கி வச்ச இலவம்பஞ்சைப் போல ஊறிக் கனத்து ஒட்டிக்கிட்டிருந்த உதடுகள ஒருவழியாப் பிரிச்சுவிட முடிஞ்சிச்சு. ஆனாலும் தடிச்சு மரத்திருந்த நாக்கக் கையால அசைச்சு வளைச்சுப் பேச வைக்கிற வழிதான் புரியல.
நாப்பழக்கி செந்தமிழ் பேச முடியாட்டியும் வேற எந்த மனுஷ பாஷையும் பேசவரலைன்னானும் க்ராய் மூய்னு எதாச்சும் ஒரு பூச்சி பாஷையாவது வந்துராதானு தொண்டைகிட்ட மண்டிபோட்டுக் கெஞ்சுனா மானசீகமா. மானசீகமாத்தான் மண்டிபோட முடியும் இனிமே. இடுப்புக்குக் கீழதான் அசைய மாட்டேங்குதே. கால மடக்கி மண்டிபோட முடிஞ்சாத்தான் எழுந்து ரெண்டு எட்டுல இந்த அறைக் கதவத் திறந்துருவாளே. ஆனா கைகள் மட்டும் உடம்ப விட்டு வெளியேறி நின்னுக்கிட்டு மொடாக் குடிகாரன் போலத் தள்ளாடித் திண்டாடுற மாதிரி அசைஞ்சுக்கிட்டிருந்திச்சுக.
அம்மா, அக்கா, அக்கா கணவர் யாராச்சும் கதவைத் திறந்துக்கிட்டு வந்துர மாட்டாங்களான்னு மறுகுறா, ம்ஹும், ஒருத்தரும் வரல. அத்தனை பேரும் இந்த அறையை ஒட்டி இருக்கிற வரவேற்பறையிலதான் டி.வி. கிட்ட ஐம்புலனையும் ஐக்கியப்படுத்திருக்காங்க. இவ கோவிச்சுக்கிட்டு படுத்திருக்கான்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. கோவிச்சிக்கிட்டவ உள்ள போயிப் பத்துப் பதினஞ்சு தூக்க மாத்திரைய முழுங்கிருப்பான்னு யோசிச்சிருக்க மாட்டாங்க. கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சவுடனே கோவத்தைக் கொண்டுபோய்க் குளுதாடியிலக் கொட்டிட்டு ராத்திரிக்குத் தோசை தின்ன அடுக்களைக்கு வந்துருவான்னு நினைச்சுக்கிட்டுப் படம் பாத்துக்கிட்டிருக்காங்க. இப்பப் போய் இந்த வெலம் புடிச்ச கழுதைய எழுப்பிவிட்டு அது மொழ நீளத்துக்கு மொகத்தத் தூக்கி வச்சுக்கிட்டு கீளுபூளுனு அழுது தொலைச்சா கெஞ்சிக்கிட்டுக் கெடக்க முடியாதுன்னு கௌரவத்தக் காப்பாத்திக்கிட்டு உக்காந்திருக்காங்க.
அரைப் பரீட்சை விடுமுறைக்காக வந்த அன்னைக்கிலேருந்து ஒரு வாரமா இவ தூங்குறப்பக்கூட, இந்த அறைக் கதவப் பூனைமாதிரி திறந்து முகத்தை நீட்டி "பே" சொல்லிட்டு ஓடுற அக்கா மகன்கூட இந்த நேரத்துல எட்டிப் பாக்க மாட்டேங்கிறான். ரஜினி பாட்டுல்ல, அசையாம உக்காந்திருப்பான்! ரஜினி பாட்டு பாடிக்கிட்டிருந்துச்சேன்னதும்தான் கவனிக்கிறா, ஐயய்யோ, டி.வி. தெளிவா சத்தமா கேட்டுக்கிட்டிருந்துச்சே, இப்ப அமத்திட்டாங்களா, இல்ல செவிடாப் போச்சா காது? ராமேஸ்வரத்துக்குப் போன மாதிரி ஆகிப்போச்சு அவ காது!
ராமேஸ்வரத்துல இவ என்ன செஞ்சானு தெரியாதே உங்களுக்கு? நாலஞ்சு வருஷம் முன்ன இவ பதினொண்ணாவது படிச்சப்ப, அவளோட தாத்தாக்குத் திவசம் குடுக்கத்தான் குடும்பத்தோட ராமேஸ்வரத்துக்குப் போனா. போனப்ப, திமுதிமுத்துக் கிடந்த கடல்ல முப்பத்தாறு தடவை முங்கி எந்திரிக்கணும்னு புரோகிதர் சொன்னபடி அவளோட அம்மா, அத்தை, அக்கா, அத்தாச்சியெல்லாம் முந்தானை நுனிய சுண்டு விரல்ல முடிஞ்சுக்கிட்டு, மூக்குக்குள்ள தண்ணி போயிராம, வலது கையால மூக்கையும் புடிச்சுக்கிட்டு, அந்தக் கையிலயே உள்ளங்கைக்குள்ள வெத்தல பாக்கையும் சுருட்டி வச்சுக்கிட்டு, லபக்னு முங்கினவுடன வெத்தலையக் கடலுக்குள்ள போட்டுட்டு எந்திரிச்சு, அதுக்குள்ளயும் தொபக் தொபக்னு அஞ்சாறு தடவை முங்கி எந்திரிச்சிக்கிட்டே இருந்தாங்க.
இவ என்னடான்னா, இன்னம் தாவணிய சுண்டு விரல்ல முடிஞ்சபடி, வெத்தலையக் கைக்குள்ள வச்சுக்கிட்டு வேடிக்கை பாத்துக்கிட்டே நிக்கிறா, கழுத் தளவு தண்ணியில, மூக்க மட்டும் தயாராப் புடிச்சபடியே. ஆனா முங்கத் துணிச்சல் வரமாட்டேங்குது. அவளோட அப்பா அங்கேருந்து திரும்பிப் பார்த்து, "நீ மொத முங்கே முங்கலையா மக்கு! சீக்கிரம், கோயிலுக்குப் போகணும்"னு சத்தம் போடவும், தொபக்னு அவளோட அத்தாச்சி புடிச்சு அவ தலைய உள்ள முக்கவும், அவ ரொம்ப ஞாபகமா வெத்தலையத் தண்ணிக்குள்ள விடுறேன்னு கையிலருந்து வெத்தலைய விடும்போது மூக்கையும் விட்டுப்புட்டா. மூக்கப் புடிச்சிருந்த கைய எடுக்கவும், குபீர்னு தண்ணி மூக்குக்குள்ள பாஞ்சதில 'பாலன்ஸ்' தடுமாறி மணல்ல ஊனியிருந்த பாதம் எழும்பி மிதக்கவும், நீச்சல் தெரியாம அலமந்து போய் ஆ ஆன்னு கத்த வாயத் திறக்க வாய்க்குள்ள தண்ணி ரொம்பி உப்புக் கரிக்க, கண்ணு, மூக்கு, காது, ஒன்பது வாயிலும் மந்திரத்தால இல்ல, தண்ணியால ஐம்புலக் கதவையும் அடைச்சிருச்சு...
என்னமோ பண்ணிட்டான்னு கண்ட அத்தாச்சி, அவசரமா அவளோட கையின்னு நெனச்சாங்க போல, காலப் பிடிச்சு மேல இழுக்கவும் இன்னம் குப்புறடிச்சப்ப, கண்ணச் சிமிட்ற நேரத்துக்குள்ள பொரட்டிப் பொரட்டி இழுத்துக்கிட்டுப்போற வெள்ளத்தோட பொறண்டுக்கிட்டே குபுகுபுனு அடிச்சிக்கிட்டு வருது அவ்ளோ நெனப்பு அவளுக்கு. சாமி கும்பிட்டுட்டுத் திரும்பிப் போறப்ப வாங்கித் தரேன்னு அப்பா சொல்லி வச்ச 'குட்லக்' போட்ட சங்கு பொம்மை; நல்லாத் தேடவிட்டு, அப்பறமா எடுத்துக் குடுக்கலாம்னு தூக்கி ஒளிச்சு வச்சிருக்கிற அக்காவோட ரெக்கார்டு நோட்டு, இன்னம் என்னென்னவோ தடால்புடால்னு ஞாபகத்துக்கு வருது... தடக்னு அலையோ என்னமோ உருட்டி மேல கொண்டாந்தப்ப தப்பிச்சிட்டமானு முழிக்கிறதுக்குள்ளத் திரும்பச் சுருட்டி உள்ளுக்குள்ள கொண்டு போயிருச்சு வேற அலை.
செத்துப் போனா எங்கிட்டு, எந்தத் திசையில போய் எங்கன இருக்கப் போறமோங்கிற பயத்துக்கு மேல அம்மாவும் அப்பாவும் எப்டித்தான் தாங்குவாங்க, அழுது அழுதே இத்துப்போயிருவாங்களேன்னு நினைக்க நினைக்கத்தான் ஆற்றாமையும் திகிலும் கவ்வுச்சு அவள. திடீர்னு பாத்தா இடுப்பளவு தண்ணியில குபுக் குபுக்னு வாய்லருந்து தண்ணி கொட்ட நின்னுக்கிட்டிருக்கா.
சித்தப்பா வந்து பொடறியோட சேத்து முடியப் புடிச்சதும் தெரியல, கபால்னு வெளியில இழுத்துத் தூக்கி நிப்பாட்டுனதும் தெரியல, அத்தையும் சித்தியும் ரெண்டு பக்கமும் புடிச்சு நிறுத்தி, வயித்த அமுக்கிக் கிட்டிருக்கதும் தெரியல. தண்ணி வாயில மகுந்து மகுந்து உமிழ்றது மட்டும் மட்டுப்பட்டு முழிச்சுப் பாத்தா எல்லாரும் சுத்தி நின்னுக்கிட்டு என்னமோ கேக்கிற மாதிரி இருக்கு, அவ்ளோ தூரத்துக்கு எதுக்குப் போய்த் தொலஞ்ச சனியனேனு திட்டுற மாதிரியும் அசையுது எல்லார் வாயும் கையும். காது ரெண்டும் ஜிவ்வுனு அடச்சிக்கிட்டு சேனல் புடிக்காத ரேடியோ பெட்டி மாதிரி கொர்ருனு அலையடிச்சிக்கிட்டு இருந்திச்சு.
அப்பா வந்து சுள்ளுனு முகத்த வச்சிக்கிட்டு ஒரு உலுக்கு உலுக்கி என்னமோ கேக்கவும், "ஒண்ணுமில்ல, ஹிஹி"ன்னு மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு, வெக்கமா புடுங்கித் திங்க, மிச்சம் முப்பத்தஞ்சையும் இன்னம் முங்கணுமானு மலங்க மலங்க முழிக்கவும், போதும் போதும் முங்குன லட்சணம்னு இழுத்துக்கிட்டுக் கோயிலுக்குப் போயிட்டு, ஊருக்குத் திரும்பி வீட்டுக்கு வந்த பிறகும், ரெண்டு நாள் கழிச்சுக் கொடக்னு கொஞ்சம் தண்ணி காதுக்குள்ள இருந்து வழியிற வரைக்கும் காது அப்டியேதான் சங்குக்குள்ள வச்ச மாதிரி இரைஞ்சிக்கிட்டே இருந்துச்சு அவளுக்கு.
இப்பத் தண்ணி புகுந்துக்காமலே அப்டித்தான் இருக்குது காது மொந்துனு. ஆனா அப்ப வந்த மாதிரி வேகுவேகுனு நெனப்பா மண்டிக்கிட்டு வரல. செத்துப் போகாம வாதங்கீதம் இழுத்துக்கிருமோ, கோமாவுல போட்ருமோங்கிற மாதிரி திகில்தான் முட்ட முழுக்க அப்பிக்கிட்டு அடச்சிக்கிட்டிருந்துச்சு. மாத்திரையப் போடுறப்பவே முடிவு பண்ணித்தான் போட்டா. செத்துப் போயிட்டா அப்பறம் எங்க போவோம், அங்க பேய், பிசாசுகளோடதான் குப்பை கொட்டணுமா, பிசாசு மாதிரி கோரமா அசிங்கமா ஆகிருவமா, அப்பப் போய் அம்மா மடில படுத்துக்கணும்னு ஏங்கியேங்கி வந்துச்சுனா, பயத்துல அப்பா கையப் புடிச்சிக்கிரணும் போல இருந்துச்சுன்னா, அக்கா கிட்டப் பேசணும்னு வந்துச்சுனா முடியுமான்னெல்லாம் நினைச்சுக் கினைச்சு மண்டையக் குழப்பிக்கக் கூடாதுன்னு கண்டிச்சு சொல்லி வச்சுக்கிட்டா தன்கிட்ட. அதையெல்லாம் யோசிச்சா எப்டி தைரியம் வரும் செத்துப்போக?
ஆனா தண்ணிக்குள்ள கிடந்து திக்குமுக்கடிக்க மட்டும் கூடாதுப்பா சாமின்னுதான் பத்துப் பதினஞ்சு தூக்க மாத்திரையத் தூக்கி முழுங்கித் தொலைச்சா. தூக்கத்துலயே அமைதியா செத்துப்போயிரலாம்னு நினைச்சதுக்கு, இப்டிப் பைத்தியம் புடிக்கிற மாதிரி கொடுமையா வரும்னு கண்டாளா?
அந்த மாத்திரைய ரொம்ப டென்ஷனானா பாதியாப் புட்டு அர மாத்திரை மட்டும் ராத்திரிக்கு மட்டும் போடச் சொன்னாங்க டாக்டரம்மா. பாதி போட்டாலே மறு நாள் மத்தியானம் வரைக்கும் முழிக்க முடியாம, முழிச்சாலும் மிதக்குற மாதிரி இருக்கும். இந்த லட்சணத்துல பதினஞ்சோ பதினாறோ போட்டு வச்சிட்டா. கணக்கு வச்சிக்கல. இப்பப் பாத்தா, தூக்கமாவும் இல்லாம என்னென்னமோ பண்ணிக்கிட்டிருக்கு.
இப்பப் பாத்து அவளுக்கு சாகப் புடிக்காம வேற வருது. ஆனா இப்ப என்ன செய்றது? கத்தவும் முடியல, எந்திரிக்கவும் முடியல, யாரும் எட்டிக்கூடப் பாக்கல, எப்பிடித்தான் பொழைக்கிறது?
கத்துனா சத்தம் வராத தொண்டை மேல கோவமா வருது அவளுக்கு; நெரிச்சுப் போட்ருவமான்னு. அறைக்குள்ள எட்டிக்கூடப் பாக்காம, வெளியில உக்காந்திருக்கிற எல்லார் மேலயும் கோவமா வருது. "இப்பவெல்லாம் ரொம்பக் கோவம் வருது, வேலை பாக்கிற இன்ஸ்ட்யூட்ல, வீட்ல எல்லாரோடையும் சண்டை போடுறேன், கத்துறேன், அப்டி டென்ஷனானா வயித்த வேற பிசஞ்சுப் பிசஞ்சு வலிக்குது"ன்னு போய் இன்ஸ்ட்யூட் டாக்டரம்மா கிட்டக் காட்டினதுக்குத் தூக்கி இந்த மாத்திரையப் போய்க் குடுத்த அந்த டாக்டரம்மா மேலயும் கோவம் கோவமா வருது அவளுக்கு.
அதுக்குன்னு அத்தனை மாத்திரையப் போடுற அளவுக்குப் பிரமாதமான காரணமில்லையேனு நீங்க கேக்கலாம். எந்தத் தற்கொலைக்குத்தான் பிரமாதமான காரணம் இருந்திருக்கு இதுவரைக்கும்? காதல்லாம் ஒரு காரணமா? இல்ல தற்கொலை பண்ணிக்கிறதுக்குக் காதலிச்சுத் தோத்துப் போறது ஒண்ணுதான் 'எலிஜிபிள்' காரணமா? தற்கொலைக்கு முயற்சிச்சு அதுல ஜெயிச்சாலும் தோத்தாலும், வெளில தெரிஞ்சவுடன மத்தவுங்க கேக்குற "லவ்வா?"ங்கிற எரிச்சல் மூட்டுற கேள்விக்காகவே தற்கொலைய வெறுத்தவ அவ.
அப்பிடியே காதல் தோல்விய விட்டா வேற என்ன நினைப்பீங்க, பரிட்சையில தோல்வி! இது அத விடக் கேவலம்! அதையும் விட்டா, புடிக்காத கல்யாணம், சிகரெட்டால சுடுற புருஷன், நாக்குல எச்சிக்குப் பதில் திராவகமூறுற மாமியார், நாத்தனார், வேற என்ன காரணம் சொல்லுவீங்க ஒரு பொண்ணு செத்தா? ஆம்பள செத்தாத்தான் காரணம் தேடுறது கஷ்டம், பொண்ணுன்னா சுலபமா இந்த நாலு 'சாய்ஸ்'ல ஒண்ண 'டிக்'கடிச்சிட்டு வாய மென்னுக்கிட்டேப் போகலாம்.
ஆனாலும் இவ செத்துப் போனவுடனே வழக்கம் போல அந்த நாலு காரணத்தத் தூக்கி இவ மேல போட்டுத் துவைக்க விட்டுறக் கூடாதுன்னுதான், ஒரு லெட்டர் எழுதி வச்சிரணும்னு நினைச்சா. பொம்பளப் புள்ளைய அடக்க ஒடுக்கமா, எவனும் நாக்கு மேலப் பல்லப்போட்டுப் பேசிப்புடாம வளக்கிறேம் பாருங்கிற பேர்ல வீட்டுக்கு வீடு நடக்கிற வீணாப்போன அடக்குமுறைய ஒத்த வரில எழுத முடியுமா? அப்ப வந்த கோவத்துலயும் அவசரத்துலயும் மாத்திரையப் போடுமுன்ன எழுத மறந்துபோச்சு. போட்ட பிறகு என்ன எழுதணும்னு மறந்துபோச்சு.
வெளில போன பொம்பளப்புள்ள வீட்டுக்குத் திரும்பக் கொஞ்ச நேரமானாலும், அடுப்புல கெடக்குற நெருப்ப அள்ளி வயித்துல கட்டிக்கிங்கடியம்மானு ஒரு சினிமா, மெகா தொடர், பத்திரிகை விடாம அத்தனையும் சொல்லிக் குடுக்குது. வீட்டுக்குள்ள நுழஞ்சவுடனே, கட்டுன நெருப்ப அள்ளி அவ தலையில கொட்டுங் கடின்னும் சொல்லிக் குடுக்குது.
மாறி மாறிக் கொட்டிக்கிட்ட நெருப்புல ஒரு கங்கு "செத்துத் தொலை சனியனே, எங்க உயிர எடுக்காம"ன்னு வந்து விழுக, யாருக்குமே என்னைய புடிக்கலன்னு அப்பப்ப டைரியில எழுதி வைக்கிறவ, அம்மாவுக்கே புடிக்கல, இனி இருந்தென்னன்னு, எப்பவும்போல தலகாணிக்குள்ள மூஞ்சியப் புதைச்சிக்கிட்டு அழுகாம, இன்னைக்கின்னு என்ன கிறுக்கு வந்துச்சோ, மாத்திரைப் பட்டையில் இருந்தத சரக் சரக்னு ஒவ்வொண்ணாக் கிழிச்சு, கைக்கொள்ளுமளவுக்கு எடுத்து, ஜன்னல்ல கொண்டாந்து வச்சிட்டுப் போயிருந்த டீயில ஒரு மடக்கு உறிஞ்சி, அத முழுங்கிராம வாயில வச்சிக்கிட்டு மாத்திரைய எண்ணிக்காம கொள்ளிக்காம அப்பிடியே வாயில போட்டு முழுங்கிப்புட்டா.
ஆனா அப்ப இருந்த புடிவாதம் கொஞ்சங் கொஞ்சமாக் கரைஞ்சு இப்ப மரண பயமும் பீதியும் கலக்கமும் உடம்பு அவஸ்தையும்தான் இங்கிட்டங்கிட்டுமா அவளோட கருப்பு முழிய உருட்டி உருட்டி விட்டுக்கிட்டிருக்கு.
கொஞ்ச நாளைக்கி முன்னாடி சாமியோடயும் சண்டை வந்ததில, சாமி இருக்கா இல்லையான்னு பகுத்தறிவுச் சிந்தனையோட குழம்பிக் கிட்டிருந்தவளுக்கு, இப்போதைக்கி இருக்குன்னு நினைக்கிறதுதான் தைரியாமாத் தோண, புள்ளையாரப் புடிச்சுக் கெஞ்ச ஆரம்பிச்சிட்டா. அவ கெஞ்சுன கெஞ்சுல, புள்ளையாரே இல்லைனாலும், போய்க் கருவாகிப் பொறந்து வந்திருப்பாருபோல, சொர்க்க வாசல் திறந்த மாதிரி அறைக் கதவு திறந்துச்சு. சொருகிக்கிட்டுக் கிடந்த கண்ண நல்லா முழிச்சு யாருன்னு பாக்கலாம்னா, பொழுது இருட்டிருச்சு. மங்கலாத் தெரியுது அம்மாதான்னு. அம்மாவப் பாத்தவுடன அழுகை ரொம்ப வருது, ஆனாக் கண்ணீர் சுரக்கல.
அதுக்குள்ள "ஃபோன்!" அப்டின்னு ஒத்த வார்த்த சொல்லிட்டு கார்ட்லெஸ் ஃபோனக் கொண்டாந்து அவ கையில குடுத்திட்டு விறுவிறுனு திரும்பிப் போய்க் கதவையும் திரும்பவும் சாத்தி வச்சுட்டுப் போய்ட்டாங்க அம்மா. மங்கலான வெளிச்சத்துல அவ சும்மாதான் படுத்துக் கிடக்கான்னு அவுங்களா நினச்சிக்கிட்டுப் போய்ட்டாங்க போல. அவசர அவசரமா, இந்த மாதிரி பண்ணிட்டேம்மான்னு சொல்லப் போறதுக்குள்ள அம்மாவும் போயிட்டாங்க, சீத்பூத்னு மூச்சுத்தான் வருது, மெதுவாக்கூட சொல்ல முடியாம போச்சு.
ஆனாலும் ஒரு வழியிருந்துச்சு. ஃபோன வாய் கிட்ட அழுத்தி வச்சுக்கிட்டு, இந்த மாதிரி தூக்க மாத்தரையத் தின்னுப்புட்டேன்னு எப்டியோ எக்கித்தக்கிச் சொன்னா. கிசுகிசுனு ரகசியம் பேசுற மாதிரிதான் இருந்துச்சு. காதுக்குள்ள லேசா அக்கா என்னக்கா சொல்றிங்கன்னு குரல் கேட்டுச்சு. அவள்ட்ட ட்யூஷன் படிக்கிற குமாரு குரல் மாதிரி இருந்துச்சு. சரியாக் கேட்டுச்சோ என்னமோ, ஃபோன வைங்கக்கா, திரும்பக் கூப்பிட்டு அம்மாட்ட சொல்றேன்னு சொன்ன மாதிரி கேட்டுச்சு. கட்டாயிருச்சு.
ட்யூஷன் படிக்கிற பையன்ட்டப் போய் இப்டிச் சின்னப்புள்ளத்தனமா பேச வேண்டியதாகிப்போச்சே, இனி புள்ளைங்க மதிக்குமானு அவமானமாத்தான் வந்துச்சு அவளுக்கு. ஆனா அதையெல்லாம் பாத்தா அவமானப்படுறதுக்கு முதல்ல உசுரு இருக்குமானு அவஸ்தையாவும் வந்துச்சு.
திரும்ப ஃபோன் அடிச்சுச்சு அவ எடுக்கல. வெளில யாரோ எடுக்குறாங்கபோல. ரெண்டு நிமிஷத்துல சடார்னு கதவத் திறந்துக்கிட்டு அம்மாவும் வேல பாக்கிற அக்காவும் குபீர்னு உள்ள பாய்ஞ்சாங்க. "தூக்க மாத்திரையா தின்ன?"ன்னு உலுக்குனாங்க அம்மா. "ம்"னு மண்டையாட்டுனா. ஓங்கி அறைவமானு ஆத்திரமும் அழுகையும் முட்டுது அம்மாக்கு. அடக்கிக்கிட்டு, "எத்தன?"ன்னாங்க. ரெண்டு கையையும் விரிச்சுக் காட்டினா.
பக்கத்து டாக்ஸி ஸ்டாண்டுக்கு ஃபோன் போட்டு, டாக்ஸி வர்ற வரைக்கும் போட்டு உலுக்கிக்கிட்டே இருந்தாங்க அம்மா. அக்கா குடும்பத்தோட தியேட்டருக்குப் படம் பாக்கப் போனாங்களாம் அப்பவே. அதான் பையன்கூட எட்டிப் பாக்கலபோல. ரெண்டு பேரும் பொம்பளையா, அவளத் தூக்கக்கூட முடியல, ரெண்டு பக்கமும் கைக்குடுத்துத் தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போனாங்க.
ஞாயித்துக்கிழமைனால ஒரு ஆஸ்பத்ரியும் இல்ல. ஒவ்வொண்ணா அலைஞ்சு பூட்டிக் கிடக்குறதப் பாத்துப் பாத்துத் திரும்புறாங்க. குடும்ப டாக்டரும் ஊர்லயே இல்லையாம். சிலுசிலுனு அடிக்கிற காத்துக்கும், கார்ல போறதுக்கும், இப்பத்தான் அவளுக்கு சுகமாத் தூக்கம் சொருகிருச்சு. எங்க போறோம், எதுக்குப் போறோம், எல்லாம் மறந்து அசந்துட்டா. அம்மா புடிச்சு உலுக்கி உலுக்கி எழுப்பும்போது, அவுங்க கண்லேருந்து கரகரனு ஊத்துற கண்ணீரத் துடைச்சித் துடைச்சிக்கிட்டு, மூக்க உறிஞ்சிக்கிட்டே துர்க்கே துர்க்கேனு ஸ்லோகத்த வாய்விட்டுப் புலம்புறதும் தெரியுது. ஆனா அவளுக்கு இப்ப ஒண்ணும் புரியல. அம்மா பேசுனது, வச்சதெல்லாம் ஒண்ணும் ஞாபகமில்ல. அம்மா கண்ணுல வர்ற தண்ணி மட்டும் அவளப் போட்டுப் பிசையுது.
மருத்துவக் கல்லூரிக்கினுகட்டி இப்ப ஆஸ்பத்ரி மட்டும் இருக்கிற அந்த கவர்மென்ட் ஆஸ்பத்ரி மட்டும் திறந்திருந்துச்சு. எல்லாரும் போன பிறகு, ஒரே ஒரு டாக்டரம்மா வீட்டுக்குக் கிளம்பப் போறப்பப் புடிச்சுக் கெஞ்சிக்கிட்டிருந்தாங்க அம்மா. லெச்சுமியக்கா பெஞ்சுல அவள உக்கார வச்சுப் புடிச்சுகிட்டு இருந்துச்சு. அப்டியே நீட்டிப் படுக்கப் படுக்கப் பாத்த அவள நிமித்தி நிமித்தி விட்டுக்கிட்டு நின்னுச்சு.
அப்டியே அசந்து ஆன்னு தூங்குறப்ப சுருக்னு என்னமோ கையில குத்தி உசுப்புச்சு. ஊசி கீசி போட்டாங்களோ என்னமோ, யாரோ படபடன்னு கன்னத்துல மாறி மாறித் தட்டி உலுக்குனாங்க. ஒரு நர்ஸம்மா!
"இதப் பார்மா, மாத்தர பேரென்ன? இங்க பார், சொல்லும்மா." எதுத்தாப்ல உக்காந்துக்கிட்டு டாக்டரம்மா அதட்டலாக் கேட்டுக்கிட்டிருந்தாங்க. "இதுல எந்த மாத்ர?"
அவளோட மாத்திரை பர்ஸ அம்மா கையோட தூக்கிக்கிட்டு வந்திருப்பாங்கபோல அந்த அவசரத்துலயும். அதுல ஜெலுஸில், க்ரோஸின் இப்டி தலவலி, காச்சல், வயித்து வலிக்கினு எல்லா மாத்திரையும் போட்டு வச்சிருப்பா. அதுல பட்டை பிரிச்சுக் கிடந்த அந்தத் தூக்க மாத்திரையக் காட்டினா.
ஒரு குண்டுப் புத்தகத்தப் பிரிச்சு, அதுல அந்த மாத்திரையோட பேரத் தேடி, அதப் பத்திப் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க டாக்டரம்மா. படிச்சுக்கிட்டிருக்கும் போதே திரும்பி நர்ஸம்மாவப் பாத்து "உப்புத் தண்ணி குடுத்து கம்ப்ளீட்டா வாமிட் பண்ண வைங்க, வரேன்"னாங்க.
எங்கயோ இழுத்துக்கிட்டுப் போனாங்க. அம்மாவும் பின்னாடியே வந்துக்கிட்டிருந்தாங்க. திடும்னு ஒரு அறைக்குள்ளக் கொண்டு போயிக் கதவச் சாத்தி ஒராளு படுக்கிற மாதிரி இருந்த மேசையில படுக்கப் போட்டாங்க. சுத்தி வெள்ளச் சேலையில நாலஞ்சு நர்ஸு, பச்சப் பேன்ட்டு சட்டையில ரெண்டு ஆம்பளக் கம்பவுண்டருங்க நிக்கிறாங்க. அம்மாவக் காணும். உள்ள விடல போல. அவளுக்கு ஒரு மாதிரியா உதறல் எடுத்துச்சு, என்னமோ ஏதோ பண்ணப் போறாங்கன்னு.
என்ன ஏதுனு மட்டுப்படுறதுக்குள்ள திடும்னு என்னத்தையோ வாய்க்குள்ள விட்டுத் திணிக்கிறாங்க, அய்யோயம்மா, அது சுரீர்னு உள்ள இறங்கி குடலு வயிறுன்னு போகுது, தொண்டைக்குள்ள பிரம்புக்கம்ப முழுங்குற மாதிரி இருக்கு. அத ஆவேசமாப் பிடுங்கப் பாத்தா. கை ரெண்டையும் யாரோ இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு, மொடமொடனு என்னத்தையோ ஊத்துனாங்க, அது அந்த தொண்டைக்குள்ள போன என்னமோ வழியா வயித்துக்குள்ள போயி, குபீர்னு வயித்தக் கலக்கி, கொடகொடகொடன்னு வாந்தியா எடுத்தா.
எடுக்க எடுக்க நிறுத்தாம, அவுங்களும் என்னத்தையோ ஊத்திக்கிட்டே இருக்க, "நிறுத்துங்கடீ"னு கத்தணும் போல வந்துச்சு. தூக்கக் கலக்கமெல்லாம் ஓடிப்போயி ஒரு வேகக்கிறுக்கு வந்துச்சு.
இந்தக் கிங்கர கிங்கரிகள்ட்டருந்து தப்பிக்கிறது ஒண்ணுதான் பிழைக்கிற வழிங்கிற மாதிரி அவளுக்கு ஒரு வெலம் வந்துச்சு. வந்த வேகத்துல, கை ரெண்டையும் அத்துப் பறிச்சுக்கிட்டுத் தொண்டைக்குள்ள போனதத் தொட்டுப் பாத்தா. தண்ணிக் குழாய்த் தடிமனுக்கு ஒரு ரப்பர் குழாய். ரெண்டு கையாலயும் ரப்பர் குழாய ஒரே இழு! உர்ருவிப் புட்டா உருவி. முணுக்குங்கிறதுக்குள்ள உருவிட்டான்னாலும் வயித்துக்குள்ளருந்து அது பயணிச்சு வந்த பாதை முழுக்க உறுத்தல் இழுபட்டுச்சு. ஒரு நொடி ஹா!ன்னு இருந்துச்சு.
அவுங்க சுதாரிக்கும் முன்ன மேசையிலிருந்து தவ்வி விழுந்தடிச்சு எழுந்து
தாவி "அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஆஆஆ!"னு அலறிக்கிட்டே கதவுத் தாப்பாவத் தேடித் திறந்தா. கதவுக்கு அந்தப் பக்கம் கதவப் பிடிச்சுக்கிட்டே அம்மா அழுதுக்கிட்டிருக்கிற மாதிரி ஒரு பிம்பம் கண்ணுக்குள்ளயே நின்னுக்கிட்டிருந்துச்சு அவ்ளோ நேரமும். திறந்து பாத்தா கதவப் பிடிச்சுக்கிட்டு ஒருத்தரும் நிக்கல. அம்மாவைக் காணம். கிலி தலைக்கேறுச்சு. இந்த யமலோகத்திலருந்து அவள மீட்க இருந்த ஒரே அம்மாவையும் காணங்கவும் மாட்டுனாச் செத்தோம்டான்னு எந்தப் பக்கம் ஓடலாம்னு சுத்திமுத்திப் பாத்தா. தூரத்துல மருத்துவமனை வளாகம் நீட்டமா வளர்ந்து போய் வளையிற இடத்துல எந்த நேரம் பாத்தாலும் செம்பருத்திப் பூவத் தூக்கித் தலையில சூடிக்கிட்டிருக்கிற ஆரோக்கிய விநாயகர் சிலையோட காலப் புடிச்சிக்கிட்டு நின்னவுங்களோட புடவை அம்மாவோடது மாதிரியே இருந்திச்சு.
கூப்பிடலாம்னு "அம்..."ன்ன வாய "மா"ன்னு திறக்கும் முன்ன ஒரு நர்ஸ் வந்து படார்னு கதவை அறைஞ்சு சாத்தி, அவளத் தரதரனு இழுத்துக் கொண்டாந்து திரும்ப அந்த நாத்தம் புடிச்ச மேசையிலயே அவ எடுத்து வச்சிருந்த வாந்தி மேலயேப் படுக்கப் போட்டுச்சு. "தூக்க மாத்திரைய முழுங்கும்போது இந்த அம்மா ஞாபகம் லீவெடுத்துக்கிட்டுப் போயிருச்சோ, இப்பக்கத்துற அம்மா, அம்மான்னு?" வெள்ளச் சேலையில ஊதா பார்டர் போட்ட முந்திய இழுத்துச் சொருவிக்கிட்டு வெடுக்னு கேட்டுக்கிட்டே சுள்ளுனு பாத்துச்சு அந்த நர்ஸம்மா.
உடனே கபால்னு மத்த நர்சுகளும் கம்பவுண்டர்களும் நாலாபக்கமிருந்தும் அவ கைகளையும் கால்களையும் இறுக்கிப் பிடிச்சுக்கிட்டாங்க. அப்டி யாராச்சும் இறுக்கிப் பிடிச்சாலே திமிறியெடுக்கணும்னு இந்த உடம்புக்கு யார்தான் சொல்லி வப்பாங்களோ அனிச்சையா அதுபாட்டுக்கு குய்யோமுறையோனு குமுறிக்கிட்டுக் கிடந்துச்சு. ஒரு கம்பவுண்டர் திரும்பவும் அந்த நாசமாப்போன ரப்பர்க் குழாய வாய்க்கிட்ட கொண்டாரவும் "ம் ம்ஹ்ம் ம் ம்"னு உதட்ட மடிச்சு இறுக்கமா வாய மூடிக்கிட்டே கத்த ஆரம்பிச்சா. ரெண்டு பக்கக் கன்னத்தையும் தாவாங்கட்டையோட சேத்து முரட்டுக் கைய வச்சு அந்தக் கம்பவுண்டர் பலமா அழுத்த அழுத்த, மடிஞ்ச உதடு தானா அவுந்து சொப்னு திறந்துக்கிச்சு. சடார்னு அந்த யமகாதகக் குழாய வாய்க்குள்ள விட்டு... அய்யோயம்ம்மா... போச்சு போச்சுத் தொண்ட... நெஞ்சு... கொடலு... வயித்துக்குள்ள... போயிருச்சு!
வாய்க்குள்ள போன குழாயோட வெளிமுனையில புனலச் சொருகி இடது கையால தூக்கிப் புடிச்சபடி மீச வச்ச சுதந்திர தேவி சிலையாட்டம் கம்பவுண்டர் நிக்க, ஒரு ஆயா போய் அறைக்குள்ள பக்கவாட்ல இருந்த கழிவறைக் குழாயிலிருந்து மொடமொடனு கொட்டுன தண்ணிய வழுவழுப்புத் தேஞ்சு சொர சொரத்துப்போன சிவப்பு வாளியில புடிச்சுக் கொண்டாந்து, கண்ட உப்பையும் கொட்டிக் கலந்து டப்பால மோந்து மோந்து புனல்ல தபதபனு ஊத்துச்சு.
ஊத்த ஊத்த, குழாய் வழியா உள்ள போன உப்புத் தண்ணி வயித்துல ரொம்பி ரொம்பி வயிறு வெடிச்சே சாகப் போறமோங்கிற பயத்தோட குமட்டலும் சேந்து உவ்வா உவ்வானு ஒரே சத்தம் போட்டுக்கிட்டே வந்துச்சு வாந்தி. வலதுகைப் பக்கவாட்டுல மண்டையத் திருப்பித் திருப்பி விட்டு வாந்தியெடுக்க வக்கிறாங்க. மதியம் அவ சாப்பிட்ட கீரை, பருக்கை பருக்கையா சோறு கூட வருது, இவ்ளோ நேரம் செரிக்காமலா இருக்கும்? ஆனா மாத்திரை மாதிரி ஒண்ணும் தென்படல. மேச, கீச, அவ மேலு, கழுத்து, முடி, நைட்டி, கை கால்லாம் அப்பி வழிஞ்ச அந்த வாந்தியக் குனிஞ்சு குனிஞ்சு பாக்குறாங்க ஆயாவும் கம்பவுண்டரும். மாத்திரையத்தான் தேடுனாங்களோ என்னமோ! அதப் பாத்தா திரும்ப அருவருத்து வாந்தி வருது அவளுக்கு. அவுங்க எப்டித்தான் பாத்துக்கிட்டு சும்மா நிக்கிறாங்களோனு வேற வெக்கமா வருது.
நாக்குத் தள்ளிப் போச்சு அவளுக்கு. ஸ்டார்ட்டர் போயி கருப்பாயிருந்த மங்கின ட்யூப்லைட் ஒளி அந்த அறைய ஒரு இழவு விழுந்த இடம் போல ஆக்கிக்கிட்டிருந்தாலும், "நான் செத்துப்போக மாட்டேன்"னு ஒரு அவசரத் தீர்மானம் போட்டுக்கிட்டா அவ.
வயித்துக்குள்ளேர்ந்து இனி குடலுதான் வெளில வரும்போல. அத்தனையும் வறண்டி வறண்டி எடுத்த பிறகும் மேக்கொண்டு மேக்கொண்டு தண்ணிய மோந்து புனல்ல ஊத்துறத நிறுத்தவேயில்ல ஆயா. அரிக்கேன் விளக்குக்கு மண்ணெண்ணெய் ஊத்தும்போது புனலுக்குள்ள பதவிசா சிந்தாம சிதறாம பாட்டி ஊத்துற மாதிரியா ஊத்துது ஆயா? அது பாட்டுக்குச் சித்தம் போக்கு சிவம் போக்குன்னு சாமிக்கு அபிஷேகம் பண்ற மாதிரி கொடகொடன்னு ஊத்துது. டப்பாவிலிருந்து பாதித் தண்ணிதான் புனல் வழியா வயித்துக்குள்ள போகுது. மிச்சத் தண்ணி பூரா வாயிலயும் மூக்குலயும் அடைச்சுத் தளும்பிக்கிட்டு நிக்கிது. கண்ணுலயும் வாயிலயும் மூக்குலயும் உப்புத் தண்ணி... ராமேஸ்வரத்துக்கே போகாம உப்புத் தண்ணிக் கடல் துரத்துது! மூச்சு விட முடியல, முட்டுது. கழுத்த யாராவது நெரிச்சா மூச்சுக்குத் தவிச்சுப் போய்க் கடைசி பலங்கொண்ட மட்டும் நெரிக்கிறவுங்க கையத் தள்ளிவிடப் பாக்குற மாதிரி அவ வாந்தி எடுத்துக்கிட்டே அந்தக் குழாயப் புடுங்க முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தா.
சடக்னு கதவத் திறந்துக்கிட்டு டாக்டரம்மா உள்ள நுழஞ்சு மேற்பார்வை பாத்தாங்க.
"ரொம்ப முரட்டுத்தனம் டாக்டர். குழாய உருவிப் போட்டுட்டு எந்திரிச்சு ஓடிட்டா. புடிச்சு அமுக்கி வச்சிருக்கோம். பாருங்க, இப்பவும் கையப் பறிச்சுக்கிட்டுப் புடுங்கத்தான் பாக்குறா" செல்வியக்கா மாதிரியிருந்த நர்ஸக்கா சொன்னுச்சு.
டாக்டர் எட்ட நின்னுக்கிட்டே, "த பாரும்மா, எப்டியாச்சும் உன்னப் பொழைக்க வச்சிரனும்ணுதான் போராடிக்கிட்டு இருக்கோம். கொஞ்சம் ஒத்துழை."
"எல்லாம் வந்துருச்சு, போதும் டாக்டர்"னு சொல்ல வாய அசைச்சா "தெ ஆ தொ தா"ன்னு ஒலிக்கிது. அவளப் போட்டு இவுங்க அமுக்கிட்டிருக்க மாதிரி நாக்கப் போட்டுக் குழாய் அமுக்கிக்கிட்டுக் கிடக்கே, எங்கிட்டு வளையும் பேச?
டாக்டரம்மா புரியாம, "நீ திரும்பத் திரும்ப குழாய உருவினீனா, திரும்பத் திரும்ப உள்ள சொருகுறப்ப ரொம்ப வலிக்கும். சொல்லிட்டேன். உனக்குத்தான் வேதனை! தேவையா? இவுங்களையும் போட்டுப்படுத்தாம வலியப் பொறுத்துக்க"ன்னாங்க.
"மயக்க மருந்து குடுத்தாவது செய்ங்களேன்"னு கதறுறா. யாருக்குப் புரியுது?
"ப்ளீஸ், போதும்"னு கெஞ்சுறா. அதுகூட எப்டித்தான் புரியும்? ரெண்டு விரல தொண்டைக்குள்ள விட்டுக்கிட்டு சொல்லிப் பாருங்களேன், என்னத்தப் புரியுதுனு.
ரெண்டு பக்கமும் புடிச்சு வச்சிருக்கிற ரெண்டு கையயும் வலுக்கட்டாயமா கொஞ்சம் இழுத்துச் சேத்து கும்பிடுற மாதிரி வைக்க முயன்றுக்கிட்டே மூஞ்சி முழுக்கத் தண்ணியும் கண்ணீருமா போதும் போதும்னு அரற்றுறா, ஒரு வாந்திக்கும் மறு வாந்திக்கும் இடையில.
டாக்டரம்மாக்கு ஒரு மாதிரியா புரிஞ்சுச்சோ என்னமோ, மணிக்கட்டுல கடிகாரத்தப் பாத்துக்கிட்டே, "கம்ப்ளீட்டா க்ளியர் பண்ணணும். நாலு மண்ணேரத்துக்கு முன்னாடி மாத்திர போட்டதுனா இன்னேரம் வயித்துல ஒண்ணும் மிஞ்சாது, ரத்தத்துல கலந்துருக்கும். ஆனாலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். சுத்தமா வெளில கொண்டாந்துருங்க. நான் ஆன்ட்டிபயாடிக்ஸ் தயார் பண்றேன். முடிச்சதும் குளுப்பாட்டி வார்டுக்கு கொண்டாந்துருங்க"னுட்டு கதவத் திறந்துக்கிட்டுப் போயிட்டாங்க.
இப்பத்தான் அவளுக்குப் பயம் டிராக் மாற ஆரம்பிச்சுச்சு. என்னமோ இவுங்கள்லாம் அவளச் சித்திரவதை பண்ணிக் கொல்லப் போற மாதிரியும் இவுங்கள்ட்ட தப்பிச்சிட்டாப் பொழச்சிருவம்னும்ல நினச்சிக்கிட்டிருக்கா. இந்த நேரத்துல அம்மாவாலலாம் காப்பாத்த முடியாது, இவுங்களாலதான்னு திருப்பிப் போட்டு யோசிக்கவெல்லாம் மூள கொழம்பிப் போனாலும், கொன்னுக்கிட்டிருக்கது வேற. அது ரத்தத்துலலாம் கலந்துபோச்சுனு டாக்டரம்மா சொன்னதுல சாகமாட்டேங்கிற அவளோட தீர்மானம் ஆட்டங்கண்டு போச்சு.
காப்பி கலர்ல வந்துக்கிட்டிருந்த வாந்தியெல்லாம் தீந்து போய் இப்ப வெறுந் தண்ணியா வழிய ஆரம்பிச்சுச்சு. அப்பப்ப உவ்வா உவ்வான்னு சத்தத்தோட உள்ள போற உப்புத் தண்ணியால குமட்டல் மட்டும்தான் வந்துச்சு. ஆஞ்சு ஓஞ்சு போயிக் கெடந்தா. கண்ணு ரெண்டும் செருகிக்கிட்டு தூக்கமோ மயக்கமோ என்னமோ வந்து அமுக்கையில, சரேல்னு ஒரு உருவல். தூக்கிவாரிப் போட்டுப் பாத்தா, அப்பாடா ஒரு வழியா ரப்பர் குழாயத்தான் உருவிட்டாங்க.
"முடிஞ்சிருச்சா? அவ்ளொதானே?"னு ஈன ஸ்வரத்துல கேக்குறா, நாக்கு வளையல, முதல்ல மாதிரியே "து தி தா"ங்குது.
கழிவறையிலயே குளிக்கிறதுக்குன்னு விட்டிருந்த கொஞ்ச இடத்துல ஒரு ஸ்டூலப் போட்டு அவள உக்கார வச்சு, குழாயிலருந்து கொட்டி ரொம்பிக்கிட்டிருந்த தண்ணிய வாளிலருந்து மோந்து மோந்து அவ தலையில "அலசு, நல்லாக்கைய முடிக்குள்ள குடுத்து அலசு"ன்னு சொல்லிக்கிட்டே எட்டி நின்னு ஊத்துனாங்க அம்மா.
நைட்டிலருந்த வாந்திலாம் கழுவினவுடன, "அதக் கழட்டிட்டு சோப்பப் போடு"ன்னாங்க அம்மா.
"நா போட்டுக்கிறேன்"னுட்டு கதவச் சாத்திட்டு வம்பாடு பட்டு அந்த ஈர நைட்டிய உரிஞ்சு போட்டுட்டு, மேலுக்குக் காமாசோமானு சோப்பப் போட்டு அலம்பிக்கிட்டு, அம்மா குடுத்தத் துண்டால போத்திக்கிட்டு வேற உடைக்குக் கதவுக்கு வெளியில கைய நீட்டும்போது, "செத்துக்கித்துப் போயிருந்தா இப்டியா மறைச்சிக்க முடியும்? யாரோ எவரோலாம் வந்து குளுப்பாட்டுறம்னு பாத்திருப்பாங்களே"னு யாரோ சொல்றதக் கேட்டதும் துணுக்னு தூக்கிப் போட்டுச்சு அவளுக்கு. அம்மா எடுத்திட்டு வந்திருந்த வேற நைட்டியத் தப்புத் தப்பா மாட்டிக்கிட்டு வெளியில வர்றதுக்குள்ள நாலஞ்சு தரவ அசத்தியசத்திக் கொண்டு போய்ச் சுவத்துல தள்ளிக்கிட்டு இன்னமும் என்னமோ பண்ணையிலயும் "நல்ல வேள சாகல, அவஸ்தையெல்லாம் முடிஞ்சிருச்சு, பொழச்சிட்டோ ம்"னுதான் நினச்சிக்கிட்டா.
ஆனா அதுக்கப்றம்தான் வேற அறைக்குக் கொண்டுபோய், படுக்கையில முதுகுப் பக்கம் ரெண்டு தலகாணிய முட்டுக் குடுத்து சாய்மானமா உக்கார வச்சு, ஒரு கை நரம்புல குளுகோஸும் இன்னொரு கை நரம்புல மருந்தும் ஏத்திவிட்டாங்க. மருந்து ஏத்தி முடிஞ்சவுடனே, சிரிஞ்ச எடுத்துட்டு ஊசிய மட்டும் நரம்போட குத்துனபடியே ஒட்டிவிட்டுட்டாங்க. அப்பப்ப வந்து மருந்து ஏத்தும்போது ஒவ்வொரு தரவையும் நரம்பத் தேடிக்கிட்டுத் திரிய முடியாதுனு.
டாக்டரம்மா ஒருவழியா வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க பாவம். "நாப்பத்தெட்டு மணி நேரம் போனாத்தாம்மா உறுதி சொல்ல முடியும்"னு அம்மாவக் கலங்கடிச்சுக்கிட்டிருந்தாங்க டாக்டரம்மா புறப்படும்போது. "அதுவரைக்கும் தொடர்ந்து ட்ரிப்ஸ் ஏத்தணும். எத்தன பாட்டில்னு கணக்குப் பண்ணி எழுதிருக்கேன், ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் ஏத்த வேண்டியதும் எழுதிருக்கேன், ஆஸ்பத்ரிக்குள்ள இருக்குற மெடிக்கல்ஸ்ல போய் வாங்கிட்டு வந்திருங்க"னு அம்மாகிட்ட சொல்லிட்டு, நர்ஸப் பாத்து, "ட்ரிப்ஸ் முடிய முடிய மாத்திக்கிட்டே இருங்க. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ ஆன்ட்டிபயாடிக் ஏத்துங்க. நடுவில சீரியஸா எதாவது பிரச்சனையானா, எனக்குக் கால் பண்ணுங்க"னு சொன்னதோட போயிருந்தா பரவால்ல, நின்னு திரும்பிப் பாத்து "முக்கியமா நாப்பத்தெட்டு மணி நேரத்துக்குப் பேஷண்ட்டத் தூங்க விட்டுராதீங்க, கண்ணுல தண்ணியத் தெளிச்சு, முழிக்க வச்சுக்கிட்டே இருங்க"னு ஒரு குண்ட வச்சிட்டுப் போயிட்டாங்க. அதுலதான் மறுபடி ஆரம்பிச்சுச்சு அவதி அவளுக்கு.
ஆயிரம் மல்லருங்க வரிஞ்சு கட்டிக்கிட்டு எழுப்பப் போயி, ஆ...னு எனக்கென்னனு தூங்கிக்கிட்டிருந்த கும்பகர்ணன் இழுத்து விட்ட மூச்சுக் காத்துல குன்றுகள் கூட்டங்கூட்டமா ஓடுற மாதிரி அத்தன பேரும் அவனோட வாய்க்குள்ள போறதும் வாரதுமாத் திக்கி முக்கித் தவிச்சுப் போயித் தாரை தப்பட்டை சங்கெல்லாம் காதுக்குள்ள ஊதியும் பொட்டுத் தூக்கங் கலையாம, அசங்காமக் கசங்காமக் கிடந்த கும்பகர்ணனப் புடிச்ச மாதிரி ஒரு ராட்சசத் தூக்கம் அப்பிக்கிட்டுக் குமிஞ்சிச்சு அவ மேல.
வாந்தியெடுத்து வெட்டி முறிச்சுத் தலையக் கிலயக் குளிச்சுப் படுக்கப் போட்டதா, மாத்திரையோட வேலைதானான்னு தெரியல, விட்டா ஆறு மாசமென்ன, ஆறு வருஷம் தூங்குவாபோல. விட்டா ஒரேடியாத் தூங்கிருவமேன்னு உறைக்க மாட்டேங்குது அவளுக்கு. விட்டாத்தானேன்னு வெறுக் வெறுக்னு நிக்கிறாங்க அவளச் சுத்தி, அவ கண்ணுல தண்ணியத் தண்ணிய தெளிச்சுக்கிட்டு.
குத்துக்கோல், சம்மட்டி கிம்மட்டியெல்லாம் கொண்டு தலையில, தாடையில, மார்ல, கைக்கெட்டுன சந்து பொந்துலைலாம் தாக்கிப் பாத்தும், எந்திரிப்பேனான்னு கிடந்த கும்பகர்ணனால வாடிய கையினர் ஆகிப்போன மல்லர்களப் போல, இவள எழுப்பியெழுப்பிவிட்டே சோந்து சுணங்கிப் போயிருந்தாங்க அம்மா, அக்கா, அக்கா வீட்டுக்காரர்லாம். அவுங்கள்ளாம் எப்ப வந்தாங்கன்னு தெரியல.
ஒவ்வொருத்தரா ஷிஃப்ட் போட்டுத் தூங்கிக்கிட்டும் இவ பக்கத்துல உக்காந்து எழுப்பிக்கிட்டும் இருந்தாங்க. எப்பவும் விடியக் காலையில அம்மா எழுப்பிவிட வரும்போது "ப்ளீஸ்மா, அஞ்சு நிமிஷம்"னு கெஞ்சலாக் கையை விரிச்சுக் காட்டுற மாதிரிக் காட்டிக்கிட்டே இருந்தா ராத்திரி பூரா. தூக்கம் போட்டு அழுத்தியெடுக்கும்போது தூங்க விடாமப் பண்றதவிட வேற நரக தண்டனை உலகத்துலயே கிடையாதுன்னு அழுத்தந்திருத்தமாத் தெரிஞ்சு போச்சு அவளுக்கு.
யாராச்சும் கொஞ்ச நேரம் கண்ணசந்துட்டாத் தானும் கொஞ்சம் திருட்டுத்தனமாத் தூங்கிக்கலாம்னு ஏங்கிக் கிடந்தா. அப்டியொரு சந்தர்ப்பம் லட்டு மாதிரி வந்துச்சு, அக்கா வீட்டுக்காரர் முறை வந்தப்ப. நடுவில அவர் எங்கிட்டோ எந்திரிச்சுப்போக, சொர்க்கம் மாதிரி ரெண்டு நிமிஷம் அசந்தவளுக்கு அப்பப் பாத்து சி.என்.சி. வந்துச்சு. கல்லூரில ஒண்ணுக்குக்கு சின்ன நேச்சர் கால் - 'சி.என்.சி.'ன்னே சொல்லிப் பழகிப் போச்சு அவளுக்கு. முட்டி முட்டி நெருக்குது, ஒருத்தரையும் காணோம்.
நர்ஸ் வந்து ட்ரிப்ஸ் ஏறுற கைகள அசைக்காம, அந்த முக்காலில இருந்த செருமஞ் சட்டி மேல கைத்தாங்கலா உக்கார வைக்கிற வரைக்கும் மூத்திரத்தையும் தூக்கத்தையும் உயிரையும் கையில புடிச்சுக்கிட்டே இருக்க வேண்டியதாப் போச்சு. இருந்து முடிச்சுத் திரும்பப் படுக்கையில சாஞ்சுக்க வச்சப்பக் கழுவணும் போல இருந்திச்சு. எப்டிக் கேப்பா? அந்தச் சட்டிய நர்ஸம்மா எடுத்திட்டுப் போயிக் கழிவறையிலக் கொட்டிட்டு, கழுவிக் கொண்டாந்து வச்சப்ப, அவுங்க முகத்தப் பாக்கவே அவளுக்குச் சங்கடமா இருந்துச்சு. இதுக்கே இப்பிடின்னா, பி.என்.சி. வந்திரக் கூடாதேன்னு கும்பிட ஆரம்பிச்சா.
ஒரு பெரிய கடமை முடிச்ச நிம்மதில அப்டித்தான் ஒரு கிறக்கத்துல கிடந்தப்ப, பதைபதைச்சுக்கிட்டு வந்து அம்மா எழுப்பிவிட்டுட்டாங்க. முழிச்சதும், தூங்கிட்டுத்தான் இருந்திருக்கா, விபரீதமா ஒண்ணுமில்லனு அம்மா முகத்தில நிம்மதி. ஆனா மூஞ்சியத் திருப்பிக்கிட்டு, மூக்க உறிஞ்சிக்கிட்டு முந்தானையில அடக்கியடக்கிப் பாத்து முடியாம, ஜன்னல் பக்கமாப் போயி விசிச்சு விசிச்சு மெல்லிசா, ஆனா வெள்ளப் பெருக்கா அழ ஆரம்பிச்சிட்டாங்க. தற்கொலைக்குத் தோணுன அத்தனை காரணத்தையும் விட, பொழைச்சிரணும்கிறதுக்கு நிறையாக் காரணம் முளைச்சிக்கிட்டே இருந்துச்சு. அதுலயும் இந்தக் கண்ணீர் ரொம்ப வலுவான காரணமாயிருந்துச்சு.
அடுத்த செட் மருந்து, குளுக்கோஸ்னு ஒரு மூட்டையக் கொண்டாந்து வச்சிட்டு அக்கா அம்மாகிட்ட, "எப்டியோ இது வரைக்கும் வாங்கியாச்சுமா, நாளைக்கும் அரசு விடுமுறை, பேங்க்கு லீவு. மிச்சப் பணத்துக்கு எப்டியாச்சும் வழிபண்றேன்னு போயிருக்காரு அவரு. அப்பா என்னைக்கி வர்றாங்க?"னு கேட்டா. "நடுராத்திரில எங்க போயி..."னு ஆரம்பிச்ச அம்மா, அவளுக்கும் அழுகை வர்றதப் பாத்து வெளில கூட்டிட்டுப் போய்ப் பேசுனாங்க. அதுக்கு இதுக்குன்னு மருந்து மாத்திரை போக, ஆஸ்பத்ரிக் கட்டணம் மட்டுமே பத்தாயிரத்துக்கிட்ட வந்திருச்சாம்.
காலையில குடிக்க வெதுவெதுப்பாக் குடுக்கலாம்னு சொன்னாங்க போல, அக்கா வீட்டுக்காரர் தூக்குச் சட்டில வாங்கியாந்து ஆத்திக்கிட்டே, "மகாராணி மாதிரி அறைக்குள்ள கட்டில்ல படுத்து நிம்மதியாத் தூங்கி எந்திரிச்சிருக்கலாம், இம்புட்டும் தேவையா?"ன்னப்ப, மூஞ்சியக் கழட்டிக் கொண்டுபோயி எங்கனயாச்சும் மாட்டி வச்சிட்டு வந்து படுத்துக்கலாமான்னு வந்திச்சு அவளுக்கு.
கழிவறையைக் கழுவிவிட வந்த ஆயா அறைவாசல்ல யார்கிட்டயோ, "சூசைட் கேஸ்தானே, இந்த ரூம் தான்"னு சொல்லிக் கிட்டிருந்துச்சு. ஷிஃப்ட் மாறி வந்த நர்ஸ்தான் உள்ள வந்தாங்க. ட்ரிப்ஸ், மருந்து மாத்துறது, ஏத்துறது, பிரஷர், கிஷர் எல்லாச் செக்கப்பும் முடிச்சுக் கிளம்பினதும், அக்கா அம்மாட்ட, "மாத்திர வாங்கப் போனா, அந்த சூசைட் கேசுக்கான்னு கேக்றாங்க, ஆஸ்பத்ரி, மெடிக்கல், சுத்து வட்டாரமெல்லாம் இப்ப இவபேர் சூசைட் கேஸ்தான்"னு ரொம்ப மெதுவா சொன்னாலும், அவ காதுல விழுந்துச்சு. பொழைச்சி வீட்டுக்குப் போனப்றம் இருக்குடி ஒனக்குன்னுதானே நினைச்சிக்கிட்டா.
இப்ப பாதிக் கிணறு தாண்டியாச்சு. இன்னொரு இருவத்தஞ்சு மணி நேரம் போனாப் போதுமாம். பக்கத்து பெட்ல இப்பத்தான் பிரசவமான பொண்ணையும் கொழந்தையவும் கொண்டாந்து சேத்திருக்காங்க. ஐயோயம்மா, இனிமே ஜென்மத்துக்கும் இன்னொரு தடவ புள்ளப் பெத்துக்க மாட்டேன்டாப்பா சாமின்னு முணங்கிக்கிட்டிருக்கு அந்தப் பொண்ணு. ஆனா இன்னொரு தடவ, நா பொறக்க மாட்டேன்டாப்பான்னு பக்கத்துல கிடக்கிற அந்தப் பாப்பாக்கு இன்னம் நினைக்கத் தெரியாதேன்னு திரும்பிப் பாத்தா.
நடுவில தடிமனாத் திரைச்சீலை தொங்கினதுனால ஒண்ணும் தெரியல. இவ கால்கிட்ட உக்காந்திருந்த அம்மா, அப்டியே அசந்து, இவ மேலயே சாஞ்சு தூங்கிட்டாங்க. வேற ஒருத்தரையும் காணும்.
அப்பாடான்னு உதடு பிரியத் தூங்கிக்கிட்டிருக்கா. ஒருத்தரும் பாக்கல. பொறந்த பாப்பாக்கு இன்னொரு தடவ இந்தப் பாடு பட்டுப் பொறக்க மாட்டேம்பான்னு நினைக்கத் தெரியாத மாதிரி, செத்த ஆவிக்கு இன்னொரு தடவ இந்தப் பாடு பட்டுச் செத்துப் போகமாட்டேன்டாப்பான்னு நினைக்கத் தெரியாம போயிருமோன்னு கனவு வருது. தூங்கிட்டமா செத்துப் போயிட்டமான்னு அவளுக்கே தெரியல. தூங்குனா கனவு வரும், செத்துப் போனா கனவு வருமா?
Monday, October 01, 2007
செத்தாலும்
Publié par சிவஸ்ரீ----- à l'adresse Monday, October 01, 2007
Libellés : சிறுகதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
5 commentaires:
ஆஹா ஸ்க்ரோல் பன்னிகிட்டே போய் இதுக்கு போட வேண்டிய கமெண்ட்ட இதுக்கடுத்த பதிவுக்கு போட்டுட்டேன்.
//ஆஹா ஸ்க்ரோல் பன்னிகிட்டே போய் இதுக்கு போட வேண்டிய கமெண்ட்ட இதுக்கடுத்த பதிவுக்கு போட்டுட்டேன்.
//
Repeatei!
பாதி படிச்சிட்டு ஆபீஸ்க்கு வந்திட்டேன் ஆனாலும் மீதியை படிக்காம இருக்க முடியலை ரொம்ப நேச்சுரல்லா எழுதியிருக்கீங்க.
சி.என்.சி, பி.என்.சி இப்பதான் மொத தடவையா கேள்விப்படறேன் படிச்சவுடனே ஆபீஸ்ங்க்கிறத மறந்து வாய்விட்டு சிரிச்சிட்டேன்.
Excellent post
வாழ்த்துக்கள்
செத்தாலும் சிறுகதை மிகவும் அருமை. அப்படியே ஒரு தற்கொலை சம்பவத்தை உனர்ந்த அனுபவம். நானே அந்த பெண்ணாக உணர்ந்தேன்.
ஐஷ்வர்யா சுதாகர்,
சிங்கப்பூர்.
உண்மையிலேயே நீண்டடடடடடடட கதை. சிறி சிறு செய்திகளையும் சுவைபட சொல்லும் விதம் அருமை. கதையின் ஒட்டம் தடைப்படாமல் எத்தனை நிகழ்வுகள் கதையில். எழுதுவதற்கு பொறுமை அதிகம் வேண்டும். வாழ்த்துகள்.
Post a Comment