Friday, September 28, 2007

சிறகுகள்

பறப்பதாய் நினைத்து
மிதந்த அம்மா வயிற்றுக்குள்
கட்டி வைத்திருந்தது
ஒட்டிய தொப்பூழ்கொடி

தரையெழும்பி நின்றபோது -வான்
வரையெழும்பப் போவதாய்த்
தாள்நீட்டிக் கைவிரிக்க
தோள்வரை மட்டும் தூக்கி
இறக்கி விட்டார் அப்பா

சறுக்கு மரங்களும்
சங்கிலி ஊஞ்சல்களும் -பறக்கும்
வித்தையை வசப்படுத்துமென
தத்தியேற... இழுத்து இறக்கியது
புவியீர்ப்பு விசையா ?
புத்தகப் பையா ?

காது குடைந்த பிறகும்
காயத்துக்கு மருந்திட்ட பிறகும்
தூக்கி யெறியவில்லை இறகுகளை
அவை சிறகுகளாகும் மலைப்பில்

பின்னொரு நாள்...

வானை அளந்த களைப்பில்
தோளில் வந்தமர்ந்த புறாவைத்
தடவிய போதும்
வேதனை அளந்த கண்களுடன்
தோளில் தலைசாய்ந்த நண்பனைத்
தட்டித் தந்த போதும்

பறத்தலை விட -சக உயிர்களைப்
புரத்தல் பெரிதென்றுணர்த்திய
தோள்களை விடவா
சிறந்தவை சிறகுகள்?

2 commentaires:

said...

தோள்களை விட சிறந்தவை எதுவுமில்லைதான்..பிரியத்தையும் நேசத்தையும் விட சிறந்தது வேறென்னவாய் இருக்க முடியும்
....
வலைப்பதிவிற்கு நல்வரவு

....

said...

//
அய்யனார் said...
தோள்களை விட சிறந்தவை எதுவுமில்லைதான்..பிரியத்தையும் நேசத்தையும் விட சிறந்தது வேறென்னவாய் இருக்க முடியும்
....
வலைப்பதிவிற்கு நல்வரவு

//
ரிப்பீட்டேய்
அர்த்தம் பொதிந்த சுவையான கவிதை