Thursday, September 20, 2007

பொழப்பு

அப்பவெல்லாம் நான் பேசுவேன். ரொம்பப் பேசுவேன். பேசிக்கிட்டேயிருப்பேன். தூக்கிப் புழியிறதுக்குள்ளக் கையொடிச்சுப் போடுற ஜீன்ஸ் பேன்ட்டுகள மூச்சப் புடிச்சு ஒதறி காலாக் கம்புல போட்டுக் க்ளிப்புப் போடுறப்பக்கூடப் பேசுவேன். சன்னல் க்ரில்ல சாவி போட்டுத் தெறந்து, நாலு ஈரப் பேன்ட்டுமா சேந்து ஒராளு கனங் கனக்குற காலாக் கம்ப அலாக்காத் தூக்கி வெளிச்சுவத்துத் துளையில சொருகப் போறப்பக்கூடப் பேசுவேன். ஊரணில எறங்கி, கொண்டாந்த துணிமணியந்தா அப்டி இப்டி ரெண்டு தப்பு தப்பிப்புட்டு, கட்டாந்தரையில காயப்போட்டுப்புட்டு நாலு முங்கு முங்கி எந்திரிச்சு வந்து காஞ்ச துணியப் பொறக்கிக்கிட்டு நடையைக் கட்டுனமான்னு இல்லாம இதென்ன காலக் கொடுமைடா சாமினு பேசிக்கிட்டேதான் கம்பச் சொருகுவேன்.

சொருகப் போகையில அப்டித்தானே ஒரு மளுக்கு மளுக்கிக்கிட்டுக் கம்பு நழுவிக் கையில தொங்கும் பாருங்க, அப்டியே ஈரக்கொலையேக் கையில ஊசலாட, குய்யோ முறையோனு கூப்பாடு போடுவேன். ஐயோ இந்த இருவத்திரெண்டு மாடியொசரத்துல இருந்து கீழ விழுந்து, போற வாற மண்டையில பட்டுத் தெறிச்சுப்போனாக்க நா என்ன செய்வேன். வந்து புடிங்களேன்னு கத்தித் தீத்துப்புடுவேன் தீத்து. இப்ப மாரிக்கி நாக்கச் சுருட்டிப் பல்லக் கடிச்சுக்கிட்டு, சத்தம்போடாம ஒரே எக்குல தானா இழுத்துச் சொருவிப்புட்டு, உள்பாவாடையில கையத் தொடச்சுக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கமாட்டேன்.

அப்பறம் புதுமெய்ட் வந்த பெறகு அது வந்து ஒரு கைகுடுக்கவும் அந்தா இந்தான்னு தூக்கிச் சொருவிருவோம். புதுமெய்ட் வரப்போகுதுன்னு எனக்கு முன்னாடியே தெரியும். சோன்பப்டிக்காரண்ணே வரும்போது கரெக்டா இன்டர்வெல்வுட்டு வுட்டு மணியடிக்குமே, வீட்டுக்கிட்ட வரப்போகுது வரப்போகுதுனு நாக்கூற ஆரம்பிக்கிறமாரி, புதுமெய்ட் வந்துரும் வந்துரும்னு அப்பப்ப ஃபோன் மணியடிச்சுச் சொல்லிக்கிட்டே இருந்துச்சு ஏஜன்ட்டக்கா. பாஸ்போர்ட் ரெடியானதுல புடிச்சு, பிளேன் ஏறிருச்சு, ரத்தப் பரிசோதன ஓக்கேவாயிருச்சு, கர்ப்பங் கிர்ப்பம் இல்ல, ஒரு நோயுமில்லனு சர்ட்டிபிகேட் வந்திருச்சு, பர்மிட் போட்டாச்சு, நீங்க குடுத்த பணத்துல ஐயாயிர வெள்ளி எம்மோ யெம்முக்கு செக்கூரிட்டி பாண்டுக்கு டெபாஸிட் கட்டியாச்சு, பத்தாயிர வெள்ளிக்கி இன்சூரன்ஸ் எடுத்தாச்சு, மாசாமாசம் லெவி முந்நூத்தி நாப்பத்தஞ்சு வெள்ளி, மிச்சத்த எங் கமிஷனுக்கு வச்சிக்கிறேன்னு அப்பப்ப ஃபோனடிச்சுச் சொல்லிக்கிட்டே இருந்துச்சு ஏஜன்ட்டக்கா. மெய்ட் பயிற்சிக்கிப் போயிருக்கு, ஒங்களுக்கும் நால் மண்ணேரப் பயிற்சி, சிங்கப்பூர் பொலிடெக்னிக்கிக்கி வந்துருங்கன்னு கூப்ட்ட மறுநாளே
கூட்டிக்கிட்டு வந்துட்டாக புதுமெய்ட்ட.

எனக்குக் கூடமாட ஒத்தாசைக்கித்தான் வருதுன்னே பாத்துக்கிட்டிருந்தேன் நானு. ஆனா சின்னக்காவுட்டுப் புள்ள, பழைய மெய்ட்டக் கூப்டவா, புதுமெய்ட்டக் கூப்டவான்னு கேட்டப்பத்தான், என்னைய பழைய மெய்ட்டாக்கத்தான் அது புதுமெய்ட்டா வந்து சேந்துருக்குங்கிற வெவரமே வௌங்குச்சு எனக்கு. அப்ப ஒரு வருஷம் முன்ன நானும் புதுமெய்ட்டாத்தான் இந்த சிங்கப்பூருக்கு வந்தெறங்கிருப்பேன்னு தோணுச்சு. அப்ப எனக்கு ஒரு பேரு இருந்த மாரிக்கி அதுக்கும் ஒரு பேரு இருக்குமேன்னும் தோணுச்சு. அதுக்கிட்டக் கேட்டேன், மணிக்கொடின்னுச்சு. நா எம்பேரச் சொல்றதுக்குள்ள சின்னக்கா வந்து பெரியக்கா கூப்ட்றதாக் கூப்ட்டுச்சு.

பெரியக்கா எங்கிட்ட, "இந்த பாரு, புதுமெய்ட்கிட்டயும் தொணத்தொணன்னு பேசிக்கிட்டிருக்கக் கூடாது, தெரியுதா, அப்றம் ஒனக்கு எறநூத்தியறுவது வெள்ளி சம்பளம்னுலாம் சொல்லிக்காத, அவகிட்டயும் கேக்காத, ஒழுங்கா அவளுக்கு வேல மட்டும் பழகிக்குடு, போ"ன்னு சொல்லித்தான் அனுப்புனாங்க. ஆனாக்க, எனக்கு அப்பறந்தான் கேக்கனும்னே தோணிப் போய்க் கேட்டேன். அதுக்கு எறநூத்தி இருவது வெள்ளிதானாம். எனக்கு நாப்பது வெள்ளி கூடன்னு சொல்லி, கவலப்படாத ஒரு வருசத்துல ஏத்திருவாங்கன்னு தைரியஞ் சொல்லிப் பேசுனேன். நா, பத்தாப்பு முடிச்சதுனால கூடச் சம்பளமா இருக்கும். அது எட்டாப்புல சமஞ்சதோட படிக்கப் போமாட்டேன்னுருச்சாம்.

அதுக்கப்பறம் காஸ் அடுப்பத் திருகுறதுலேருந்து, ஆவி, எண்ணைலாம் உறிஞ்சிக்கிற மேப்பலகையத் தட்டிவிட்டுக்கனும்கிறதுலருந்து, தொவைக்கிற மிஷின்ல எந்தத் துணியோட எந்தத் துணியப் போடக்குடாது, வெலக்கிக் கழுவுற மிஷின்ல சாமான நம்மளே சுத்தமாக் கழுவிட்டுத்தான் வைக்கனும்கிறதெல்லாம் பேசிக்கிட்டேத்தான் சொல்லிக் குடுப்பேன். காலைல தோச ஊத்தி சட்னி வச்சு சின்னண்ணனுக்கும் சின்னக்காவுக்கும் ஊர்லருந்து வந்திருந்த சின்னக்காவொட மாமனார்க்கும் குடுக்கயில, மீகொரிங் கிண்டித் தம்பிக்குக் குடுக்கயில, பெரியண்ணனுக்கு கிஸ்மிஸ் போட்டு ஓட்ஸ் காச்சிக் குடுக்கயில, பெரியக்காவுக்குக் கொழுப்பெடுத்த வெண்ண தடவி உப்புப் போடாம அவிச்ச ப்ரக்கோலிய வச்சு மூடி, வாட்டுன கோதும ரொட்டியக் குடுக்கையில, புள்ளைகளுக்கு ஸ்த்ராபெரி பால்ல கார்ன்ஃப்ளேக்ஸ் போட்டு ஊட்டிவிட்டு, ஸ்கூல்ல கொண்டே விட்டுட்டு ஒடியாந்து வீட்ட மோப் போடையிலலாம் அரக்கப் பரக்கத்தான் பேசுவேன்.

அப்பறம் வந்து டிங்கிரிமீன ஔசி, செதிலெடுத்துச் சுத்தம்பண்ணி, அவிச்சு உதுத்து, கெழங்கோட பெசறி கட்லெட்டத் தட்டியெடுத்து, முட்டச் சம்பால்ல பாம்ப்ரெட்டு மீனப் பொறிச்சுப் போட்டு, தம்பிக்கிக் கோழிய வெள்ளப் பெப்பர் போட்டுக் கேயெப்சிக் கணக்கா வறுத்து, நெத்திலியோட வேர்க்கடலயும் பரங்கிவெதையும் மல்லிப்பொடியும் போட்டு வறுத்து, லெட்யூஸையும் பொன்னாங்கண்ணியும் போட்டு சூப்பு வச்சு, பாண்டா எலையும் வெள்ள வெங்காயமும் வதக்கிப்போட்டு நெய்ச்சோறு பொங்கி, பெருங்காயம் போட்டு மோரத் தாளிச்சு, பீங்காங் கிண்ணத்துல சின்னஞ்சின்னமாச் சீவுன பழங்களப் போட்டு, அதுமேல பாலைஸ்க்ரீமக் கிள்ளி வச்சு, ஒவ்வொருத் தரா வரவரப் பரிமாறிக் கிறிமாறி, புள்ளைகளப் பள்ளிக்கொடத்துலேருந்து கூட்டியாந்து ஊட்டி விட்டு, தட்டுமுட்டெல்லாம் கழுவித் தொடச்சு, ஒரு மூணு மணிவாக்குல சாப்ட ஒக்காருற வரைக்கிப் பசிமயக்கமும் திமுதிமுனு குமுறி நிக்கிற வேர்வையும் கண்ணுமூக்கெல்லாம் பட்டுக் காந்துற மொளகாப்பொடி நெடியுமாக் கொஞ்சம் மிதமா, விட்டுவிட்டுதாம் பேசுவேன்.

திரும்பச் சாய்ந்திரக் கோப்பி, தே, மைலோ, பிரெஞ்சுப்ரைஸ், வாழப்பூ வட, நக்கெட்ஸ், சுறாப்புட்டுன்னு தடபுடலாப் பொரியும் பேச்சு. அப்பறமாக் காஞ்ச துணிமணிய உள்ள எடுத்தாந்து அயன்பண்ணி அடுக்கையிலயும் அப்பாடான்னு கால நீட்டி ஒக்காந்து ராத்திரிக்கி ரொட்டிப் பராட்டாவுக்கு மாவு பெசையயிலயும்தான் ஆற அமரக்கப் பேசுவேன். அப்பத்தான் எதவுபதவா நடந்துக்கிறதெல்லாம் வெவரமா மணிக்கொடிக்கிட்ட எடுத்துச் சொல்லுவேன். பெரியண்ணனையும் சின்னண்ணனையும் பத்திக் கவலையே இல்ல. பெரியண்ணே பொட்டிக்குள்ள வைரத்த அடுக்கித் தூக்கிக்கிட்டு, கோட்டப் போட்டுக்கிட்டுக் கௌம்புனாருன்னா காலைல இங்கருப்பாரு. மத்தியானம் ஹாங்காங்ல இருப்பாரு. ராத்திரிக்கிச் சீனாவுல இருப்பாரு. எப்ப அமெரிக்கா போனாரு, எப்ப ஆப்ரிக்காவுக்கு வந்தாருன்னு பெரியக்காவுக்கே தெரியாது. ஆனாக்க, அப்பப்ப சாப்பாட்டு மேசையில அவரு தலையுந் தெரியும் பாரு, அன்னைக்கி இங்க வந்திட்டாருன்னு
கண்டுபுடிச்சிரலாம்னேன்.

பெரியண்ணனோட மூத்த மகதான் சின்னக்கா. சின்னக்காவக் கட்டுனவருதான் நம்ம சின்னண்ணன். சின்னண்ணனுக்கும் வைர வியாபாரந்தான். ஆடிக்கொருதரம் அமாசிக்கொருதரம் இங்கெ எட்டிப் பாப்பாங்க. கம்பெனியும் வீடும் இந்தோனேசியாவுலதான் இருக்கு. அவுங்க தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியாப் பக்கம் வியாபாரத்தப் பாத்துக்குறாங்கன்னு சொல்லும்போது மணிக் கொடி குறுக்கால கேள்வி கேட்டுச்சு, "அப்ப, சின்னக்கா அவுங்க புருஷனோட அங்க போய் இருக்காம, கல்யாணம் பண்ணப் பிறகும் இங்கெ அம்மா வீட்லே ஏன் இருக்குது"ன்னு.

"புருசன் இப்டி ஊரு ஊரா அலையும்போது, வீட்ல வைரக்கல்லுகள பூட்டிப்பூட்டி வச்சுக்கிட்டு, பொதையலக் காத்தப் பூதங்கணக்கா புள்ளைகள வச்சிக்கிட்டு அங்கன இருக்கமாட்டேன்னு பொறப்புட்டு இங்கயே வந்திருச்சு. அதுவும் இப்ப முக்குனா மொணங்குனா பூகம்பம் வந்திருதே, அங்கன போயி எப்பிடி இருக்குறது?"ன்னேன்.

சின்னக்காவும் பெரியக்காவும் ஏசிக்கிட்டுத்தான் இருப்பாங்க, கண்ணுமண்ணு தெரியாமக் கோவம் வரையில மட்டும் ரெண்டு தட்டுத் தட்டுவாங்க, கண்டுக்கக்குடாதுன்னேன்.

"தட்டா?"ன்னுச்சு மணி.

ஆமா, பிரெஷர்க்காரங்க அப்டித்தான் கையில கெடைக்கிறத எடுத்து அடிப்பாங்களாம். நம்ம பொழைக்க வந்தவுக அதைலாம் பெரிசு பண்ணக் கூடாதுலனு கேட்டேன், ஈழுங்க மாட்டேங்கிச்சு மணி.

ரொட்டிப் பராட்டா மாவ உருட்டி எண்ணைல முக்கி வச்சுட்டு எந்திரிச்சிப் போயி கையக் கழுவிப்புட்டு, வீட்டு மொகப்புல கண்ணாடித் தடுப்பு போட்டுத் திரையிழுத்து வச்சிருந்த ஆபீஸ் ரூமுக்குள்ள கூட்டிப் போயிப் பொட்டகத்தத் தெறந்து, சொப்புச் சொப்பா அடுக்கிருந்த வைரம் வைக்கிற ரெண்டுக்கு ரெண்டிஞ்சு டப்பிக்கள எடுத்துக் குடுத்து வார்னிஷ் போட்டுத் தொடைக்கச் சொன்னேன். இப்பதைக்கி வைரத்தக் கையில குடுக்க வேண்டாம், பொக்ஸ மட்டுந் தொடைக்கச் சொல்லுன்னு சொல்லிருந்தாங்க அக்கா. டப்பில அடுக்குனது போக அண்ணே புதுசா வாங்கியாந்திருந்த வைரம்லாம் ரக வாரியாப் பொலிதின் பைகள்ள இருந்திச்சு.

அத ஒவ்வொண்ணா எண்ணியெண்ணி, வடிவத்துக்குத் தக்கன சதுர செவ்வகம்னா பக்கவாட்டு அளவும் வட்டமாவோ நெல்லு மாரியோ கோழிமுட்ட மாரியோலாம் இருந்தா குறுக்கு விட்டமும் அளந்து, குட்டித் தராசுல எடை போட்டுக் குறிச்சு வச்சு, ஒரு சென்டிமீட்டர் விட்டமுள்ள கல்லாப் பாத்து இடுக்கியினால பொறக்கிக் கண்ணாடி டப்பில நெக்லஸ்ஸுக்குத் தோதா நுணுக்கி நுணுக்கி கண்ண வெலக்காம அடுக்கைலயும் அலுங்காமக் குலுங்காமப் பேசிக்குவேன். வெள்ள வைரம்னா கருப்பு வெல்வெட்டும் கருப்பு வைரம்னா வெள்ள வெல்வெட்டும் விரிச்சு அடுக்குன டப்பிய அப்டியே மூடித் திருப்பி, அடையாளம் வெச்சு நிமிர்றதுக்குள்ள அம்பது டப்பி தொடச்சிருக்கும் மணி. சும்மா சொல்லக் கூடாது, சீமச்சமத்தி, செந்தூரப் புத்தி. சட்டுபுட்டுனு பத்திக்கிருவா.
ரொம்ப ஜாக்கிரதையாப் பாக்கனும் வேலைய. தட்டிக் கிட்டிவிட்டு வைரம் கார்ப்பெட்டுக்குள்ள விழுந்து காணாமப்போச்சுன்னா, தொலஞ்சோம். நம்மளொட சம்பளக் காசுலதான் புடிப்பாங்கன்னேன்.

"எம்புட்டிருக்கும் இது வெல?"ன்னு கேட்டுச்சு மணி.

கல்லப் பொறுத்து, ஒரு மாசச் சம்பளமும் போகும், ஒரு வருசச் சம்பளமும் போகும், இதையெல்லாம் நம்மள நம்பிப் பொழங்கவிடுறாங்களே தங்கந்தானே அக்கால்லாம்னு கேட்டேன். அதுக்கும் ஈழுங்கல மணி. அங்கன கேமரா வச்சிருந்ததுனால நானும் வேற ஒரு விசயமும் வில்லங்கமாப் பேசிக்கல.

அப்பறமாக்க ராத்திரிக்கிப் பாயசத்துக்குத் துரியன் பழத்தச் சுளையெடுத்து நறுக்கையிலதான் இன்னொரு தங்கச்சி, சின்னக்காவுக்கு எளையது, தம்பிக்கி மூத்தது, ஆஸ்திரேலியாவுல படிக்கப் போயிருக்கு. மொத்தத்துல பெரியண்ணனுக்கும் பெரியக்காக்கும் ரெண்டு பொம்பளப்புள்ள, ஒரு ஆம்பளப்புள்ளன்னேன்.

"ஆஸ்திரேலியா எம்புட்டுத் தூரம்?"னு கேட்டுச்சு மணி மூக்கப் பொத்திக்கிட்டே.

யார் கண்டா? ஆனாக்க, சிங்கப்பூருக்காரவுக சீக்கிரம் போகுறத் தூரமாத்தான் இருக்கனும்னேன். ஏன்னாக்க, இங்கனாச்சுக்கும் தங்கச்சி மட்டும் போயிருக்கு, நா முந்தி வேல பாத்த வீட்ல மொத்தப் பேருமே வீட்ட வித்துப்புட்டு ஆஸ்திரேலியா போயிட்டாங்க, அப்பறம் ஏஜன்ட்டக்காதான் இங்க மாத்திவுட்டாங்கன்னேன். மூக்கப் பொத்திக்கிட்டே ஈழு போட்டுச்சு மணி. வந்த புதுசுல நாங்கூட மூக்கப் பொத்திக்கிட்டுத்தான் நறுக்குவேன் துரியம் பழத்த, கொடலப் பொரட்டிப்புடும்ல? இப்பப் பழகிருச்சு.

நா இங்கெ வந்து ஆறுமாசத்துல தங்கச்சி ஆஸ்திரேலியா போயிருச்சு. மணியும் நானும் போட்டுக்குற சுடிதார்,

நைட்டியெல்லாம் அது வுட்டுத்தான். ஒரு பித்தான் அந்துபோனாக் கூட அப்டியே புத்தம்புதுசாத் தூக்கிக் குடுத்ரும், நல்ல மனசுன்னேன். மணி ஈழுங்கல. புதுத் துணியும் எடுத்துக் குடுப்பாங்க தீபாவளி, விசேசத்துக்கு. மாசாமாசம் கரெக்ட்டா சம்பளத்தக் காசு மாத்தித் தந்திருவாங்க ஊருக்கு அனுப்ப. அதுலலாம் குத்தஞ் சொல்லவே முடியாது. ஆனா, தம்பிக்கிட்ட மட்டும் ரொம்பப் பேசிக்காதைன்னேன்.

"ஏன்?"னுச்சு மணி.

ஏன்னு எப்டிச் சொல்ல? அக்கா திட்டுவாங்கன்னு மட்டும் சொல்லி வச்சேன். அன்னைக்கி பால்கனியில தொட்டிச் செடிக்கி முட்ட ஓட்டப் போட்டுப்புட்டு, நாய்க்குட்டிக்கி ஆம்லெட்டப் பெசஞ்சு, பிரியாணி வச்சுக்கிட்டிருக்கப்ப, திடீர்னு இடுப்பப் புடிச்சுத் தூக்கி அங்க பாருன்னு வானத்தக் காட்டுது தம்பி. "அட என்ன தம்பி" நா ஒரு நிமிசம் என்ன ஏதுன்னு அலமந்துல போயிட்டேன்னு நாம் பேசிக்கிட்டேயிருக்க, காதுல வாங்காம, வானத்தக் காட்டி அதுக்குப் பேர்தான் பால்வீதின்னுச்சு. நா மேல ஆன்னு பாக்கையில என்ன ஷாம்ப்பூ போட்டையின்னு காதுக்கிட்ட கேக்குது. அடியாத்தி எக்குத் தப்பாப் பேசுதேன்னு, வெலகி வந்து அம்மாதான் குடுத்தாங்க தம்பி, பனியா இருக்கு, அறைக்குள்ள போயிப் படிங்கன்னு பேசிக்கிட்டிருக்கையிலயே, வெளில போயிருந்த அக்கா, கதவத் தொறந்துக்கிட்டு வந்து, என்னைய உள்ளுக்கக் கூப்புட்டு, தம்பிக்கிட்ட ஒனக்கென்ன பேச்சுன்னாங்க. அவுங்க கேட்டதும் நியாயந்தானே, இல்லக்கா இனிமேலப் பேசலக்கான்னேன். ஆனா அத மணிக்கிட்ட சொல்லல.

அப்பறம் ஒருநா, தம்பி ரூம்பு இருட்டா இருக்கவும், ஆளில்லையாக்கும்னு கூட்ற மிஷினத் தூக்கிக்கிட்டு நா உள்ள போனாக்க, தம்பி கிசு கிசுன்னு கம்ப்பியூட்டருல இருக்குற மைக்ல பேசிக்கிட்டிருக்கு. திரையில எதோ விடியோப் படம் மாரிக்கி ஒரு சின்னப் பொம்பளப்புள்ள அங்கேருந்து பேசிக்கிட்டே அம்புட்டயும் அவுத்தவுத்துப் போடுது. திக்குன்னு நிக்கிறப்பவும் திக்கித் திக்கிப் பேச்சு வருது எனக்கு. ஆத்தி, கண்டது கடியதுலாம் காண்ற வயசில்ல தம்பி. அப்பாவுக்குத் தெரிஞ்சாங்கையிலே, "வாய மூடு ஸ்துபித்"னு கத்திக்கிட்டே அந்த விடியோப் படத்த மூட மூட, வேற வேற பொம்பளப் படமாத் தொறக்குது. மைக்ல "ஐ கால் யு பேக்" சொல்லிட்டுப் பட்டுனு கம்ப்பியூட்டர அமத்திருச்சு. "இதப் பத்தி வெளில மூச்சுவிட்ட, புடிச்சு ஊருக்கனுப்பிருவேன்"னு கத்திப்புட்டு ஷூவ மாட்டிக்கிட்டு வெளில போயிருச்சு. இதையும் நா மணிக்கிட்ட சொல்லல.

மறச்சுத் திரிச்சுலாம் பேசமாட்டேந்தான், ஆனாக்கவும் என்னமோ சொல்லிக்கல நா. தம்பிக்கிப் பயந்துக்கிட்டு இல்ல.

ஆனாலும் வயசுக் கோளாறு, அறியாமச் செய்யிது, எதுக்குப் பெருசு பண்ணனும்னு நெனச்சேனோ என்னமோ.

ஆனா தம்பி இருக்கையில அதுவுட்டு ரூம்பக் கூட்டப் போகாதைன்னு மட்டுஞ் சொல்லி வச்சேன் மணிக்கிட்ட. இப்பத்தான் தம்பி தேசிய சேவைக்கிப் போக ஆரம்பிச்சிருச்சே, சனி ஞாயர் மட்டுந்தான் வீட்டுக்கு வரும். மத்த நாள்ள கூட்டலாம்னு சொன்னேன்.

னாலும் ஒருநாள், தம்பியால பெரியக்காக்கிட்ட எக்கச்சக்கமா மாட்டிக்கிருச்சு மணி. அப்ப, ஒரு வாரமாவே என்ட்டியூசிக்கிக் காய்கறி, மீனு வாங்கப்போன மணி லேட்டா லேட்டாத் திரும்பி வந்துச்சு. சந்தைப் பையில ஒருநா ஃபோர்-டித் தாளு இருந்திச்சு. கெரகமே, நாலு நம்பர்ப் பைத்தியம் புடிச்சிருச்சா ஒனக்கும்? நாக்குத் தள்ள ஒழைக்கிற காசக் கொண்டு போயி லாட்ரில போட்டுச் சீரழிக்காதைன்னேன். எனக்கென்னனு சரக்சரக்னு ப்ரெஷ்ஷப் போட்டு டொய்லெட்டத் தேச்சுக்கிட்டிருந்துச்சு மணி. இந்த வாரம் அது மொறை. எங்குட்டுப் போயி ஃபோர்டிக் கத்துக்கிட்டங்கிறேன்.

லொடலொடன்னு தண்ணியத் தெறந்துவிட்டுக்கிட்டுத் தலையக்கூடத் திருப்பல எம்பக்கம்.

அன்னைக்கி மறுநாத்தான், வீட்டுக்கு வந்த தம்பி அம்மா அம்மான்னு கத்திக்கிட்டே விறுவிறுனு நேரா பெரியக்கா ரூம்புக்குள்ள போச்சு. என்னமோ சொல்லிக்கிட்டேக் கதவச் சாத்திக்கிச்சு. கொஞ்ச நேரத்துல மணி வீட்டுக்குள்ளதான் நொழஞ்சிச்சிப் பாருங்க, அப்டியே மணியொட முடியப் புடிச்சு இழுத்துக்கொண்டுபோயி செவுத்துல சாத்து சாத்துனு சாத்தி, நாக்கப் புடுங்கிக்றாப்ல கண்டமேனிக்கி வஞ்சுப்புட்டாங்க அக்கா. தடுக்கப் போன எனக்கும் நாலு விழுந்துச்சு. ஊடால ஊடால "மார்க்கெட்டுக்குப் போன மேனாமினுக்கி மணிக்கணக்குல காணமேன்னு பாத்தா, ஓவர்ஸ்டேயில ரொட்டிப் பராட்டா போட்றவன மயக்கிக்கிட்டு நின்றுக்கா"ன்னு சொல்லிச் சொல்லி வஞ்சாங்க.

"இல்லக்கா விடுங்கக்கா"னு மொறைக்கிது, அப்றம் அழுகுது மணி.

"என்ன நொள்ள. தம்பியும் ஒரு மண்ணேரமா மறஞ்சு நின்னு நீ என்னதான் பண்றன்னு பாத்துக்கிட்டே நின்றுக்கான்.

அவனே கள்ளக்குடியேறி, அவன்ட்டப் போயி ஊழு ஊழுன்னு நீலிக்கண்ணீர் விட்டு ஃபிலிம் காட்டிருக்க. எந்நேரமும் என்னத்தையாவது வாயில போட்டு அரச்சிக்கிட்டேத் திரியிறியே, நாங் கேட்ருக்கேனா? சாப்புடக்கூட விடமாட்டேங்கிறாளுக, கொடுமப் படுத்துறாளுகன்னு நாடகமாடிருக்க, அவளே இவளே"னு ஆத்திரந் தீர மட்டும் கொட்டி வெடிச்சுப்புட்டாங்க பெரியக்காவும் சின்னக்காவும்.

"இவ நமக்குச் சரிப்படாது, ஏஜன்ட்டக் கூப்ட்டு, புடுச்சு ஊருக்கேத்து"ன்னாங்க சின்னக்கா.

மணியோட பொறந்தது அஞ்சு பொட்டப் புள்ளைங்க. வழக்கம்போல, படங்கள்ள மாதிரியே ஆஸ்மாக்காரம்மா, குடிகாரப்பா எல்லாரும் இது தலையில சொமைய வெச்சு அனுப்பிருக்காங்க. கடன ஒடன வாங்கிக் கட்டி வந்த காசையாவது திருப்பி எடுக்க வேணாமா? அப்பவும் நாந்தான் பேசுனேன். சின்னப்புள்ள, தெரியாமச் செஞ்சுருச்சு, ஒரு தரவ மன்னிச்சு வுட்ருங்கக்கான்னு பேசிப் பேசி, ஒருவழியா அக்காவும் அடிச்சு ஓஞ்சுபோயி உள்ள போயிட்டாங்க.

ஓவர்ஸ்டேயி ஆளுகள்ட்ட பேசுனா நமக்குத்தானே தொந்தரவுன்னு கண்ணத் தொடச்சுவுட்டு, தலமுடிய ஒழுங்கு பண்ணிவுட்டுக்கிட்டே சொன்னேன் மணிக்கிட்ட.

"எங்கண்ணனுந்தான் ஓவர்ஸ்டேயி, அஞ்சு வருசமா"ன்னு விக்கிக்கிட்டே சொல்லுது மணி.

அய்யோ கடவளே, புடிபட்டா குப்பறப் போட்டுப் பெரம்பாலே விளாறிப்புடுவாங்களே, அப்பறம் உசுரு இருந்தும் பிரயோசனமில்லையே, இப்ப எங்கன இருக்காப்லன்னு கேட்டேன்.

"எப்பிடியோத் தப்பிச்சி, மலேசியாவுக்குப் போயிருச்சாம்"னுச்சு.

யாரு சொன்னான்னு கேட்டேன்.

அந்த ரொட்டிப் பராட்டாப் போடுறவரு அவுக ஊருதானாம். அவருதான் சொன்னாராம்.

இவுக பொழப்பெல்லாம் யேன் இப்பிடி ஆயிப் போச்சு, இனிமே என்னன்னுதான் ஆகப் போகுதுன்னு நின்னு நெனச்சுப் பாக்க எங்க நேரமிருக்கு? அப்பறந்தான் நாவேற ஒரு மாசத்துக்கு லீவுல ஊருக்குப் போயிட்டேனே.

திரும்பி வந்தப்ப, முன்னப் பாத்ததுக்குப் பரவால்லக் கொஞ்சம் செழிப்பமாத்தான் இருந்துச்சு மணி. ஆனா என்னைய மாரிக்கே சதப் புடிக்காத ஒடம்புதான். நல்லாருக்கட்டுமே, செரமப்பட்ட புள்ள. குந்துமணியளவு கல்லு வச்சுத் தங்கத்துல ஒரு மூக்குத்திகூடப் போட்டுருந்துச்சு. சம்பளக் காசுல மிச்சம் புடிச்சு வாங்குனுச்சாம். எங்கிட்டோ , டோ ட்டோ க் கீட்டோ , ஃபோர்-டியில அழிச்சுப் புடாம உருப்பிடியாச் சேத்துக்கீத்து வெச்சாச் சரித்தானே.

அடுப்பங்கரைய மொழுவிக் கிழுவிப்புட்டு, காத்தாடியத் தூக்கியாந்து தரையக் காய வச்சுப்புட்டுப் போர்வைய விரிச்சுத் தலகாணியப் போடையில நடுச்சாமங் கடந்துருச்சு. அப்பப்ப அங்கிட்டிங்கிட்டும் போகையில டிவியில நாடகத்துலயும் ஒரு கண்ண வச்சிருந்துச்சு மணி. அமத்துனவொடனதான் படுக்க வந்துச்சு. ஃபிரிட்ஜுக்குக் கீழ தலகாணியப் போட்டுச்சு. இந்தப் பக்கம் குப்பத்தொம்பு இருக்குறதுனால, பூச்சி பட்ட புடுங்குனாலும் புடிங்கிப்புடுமுன்னு அங்கிட்டேத்தான் படுக்கும்.

பூச்சியென்னத்தப் புடுங்கப்போவுது மனுசங்களவிடன்னு பேசிக்கிட்டே எப்பவும் போல நா இந்தப் பக்கமே படுத்துக்கிட்டேன்.

அப்பப் பாத்துச் சின்னக்கா கூப்புடவும் "ராச்சசிக்கி நேரங்காலங் கெடையாது, அந்தக் குட்டிப்பிசாசு பேண்டு வச்சிருக்கும்"னு மொணங்குச்சு மணி அப்டியெல்லாஞ் சொல்லலாமா, அதுக்குத்தானே காசு குடுத்து வச்சிருக்காங்க நம்மள, நாம்போறேன், நீ படுன்னுட்டு எந்திரிச்சி வௌக்கத் தட்டிவிட்டுப் போனேன். ராவுல காத்தாடக் கெடக்கட்டும்னு நேப்பிப் போடாமக் கெடக்கவும் அதுவுட்டுக் குட்டிமெத்தையில கழிஞ்சு வச்சிருந்துச்சு குட்டி. கசகசப்புத் தாங்காம வீறுவீறுன்னு அலறுச்சு. சுத்தங்கித்தம் பண்ணி ஆத்தியமத்தி வந்து படுக்றதுக்குள்ள தூங்கிருச்சு போல மணி. பாவாட தொடை வரைக்கி ஏறிப்போனது தெரியாம அசந்து கெடக்கு, அய்யொ பாவமேன்னுட்டு இழுத்துவுட்டுட்டுப் போயி வௌக்க அமத்திப்புட்டுப் படுத்தேன். இன்னந்தான் தர ஜில்லுனு குளுருச்சு. தேங்காநாருக் கால்மிதியவாச்சும் போர்வைக்கடியில போட்டுக்கலாம்னு எந்திரிச்சு வௌக்கத் தட்டி, மிதிய இழுத்துப் போட்டாக்க, இந்த அசட்டுக் களுதைக்கி மறுவடி பாவாடையும் மாராப்பும் சம்மந்தமில்லாமக் கெடக்கு.

அடி மக்குப்புள்ள, ஒறங்கையிலயும் உள்ளுக்க ஒரு கண்ணு முழிச்சுக் கெடக்கணுன்டி பொட்டச்சிக்கின்னு பேசிக்கிட்டே, பாவாடைய இழுத்துவுட்டுப் படுத்தேன்.

மறுநா, மாஸ்ட-பெட்ரூம்புக்குள்ள நாக்காலியப் போட்டு ஏறி, ஏர்க்கோனச் சுத்தம் பண்ணிக்கிட்டிருக்கையில ஒட்டறக் குச்சியத் தூக்கிக்கிட்டு வந்துச்சு மணி. நாக்காலியப் புடிச்சிக்கன்னு சொல்லி எறங்கையில "ராத்திரி என்னமோ பூச்சி கடிச்சிப் புடிச்சி"ன்னு சொன்ன மணி, சரக்னு நைட்டி ஜிப்பத் தொறந்துப்புடுச்சு. "இங்கனதேம் பாரு"ங்குது. ஒரு எழவும் இல்ல மூட்றிங்குறேன். "தொட்டுப் பாத்தா வீங்குன மாரி இருக்குப் பாரே"ங்குது.

அடக் கிறுக்கி, மூடிக்கடி மொதல்லன்னுட்டு, மூஞ்சிக்குங் கைக்குள்ளாறையும் போடுற அந்த யாட்லிப் பவுடரே சந்தனப் பவுடர்தான், அதப்போடு, சரியாப் போயிரும்னு சொல்லிக் குடுத்திட்டு, வெவரம் புரியாத மக்குக் களுதையா இருக்கியேன்னு பேசிக்கிட்டே அடுத்த ரூம்புக்குப் போயிட்டேன்.

எல்லா ரூம்பும் முடிச்சிட்டுத் தெரச்சீல, சோபா, மெத்த ஒறையெல்லாம் கழட்டிக்கிட்டு வந்தேன் தொவைக்க. மணி குளிச்சிக்கிட்டு இருந்துச்சு. மாத்து ஒறையக் கொண்டுபோய் அததுக்கு மாட்டிக்கிட்டிருந்தேன். சின்னக்கா நாத்தனாவுக்கு அடுத்த மாசம் ஊர்ல பட்டுக்கோட்டைல கல்யாணம் வச்சிருக்குறதுனால, புள்ளைங்களுக்கும் லீவுதானேன்னு கூட்டிக்கிட்டுப் போயிருந்தாங்க சின்னக்கா. வெள்ளிக் கெழமைன்னால தம்பியும் வீட்ல இல்ல. அதுனால சமையல் வேல எப்பவும் போல ரொம்பக் கெடையாது, சுருக்கா முடிச்சிரலாம்னு லேட்டாத்தான் ஆரம்பிப்பேன்.

அதுக்குள்ள, சன்னல் கின்னல்லாம் தொடச்சுத் திரச் சீலைய மாட்டிக்கிட்டிருக்கப்ப பெரியக்கா கூப்புட்டாங்க. சரி எந்திரிச்சுட்டாங்களான்னு பேசிக்கிட்டே, ஃப்ளாஸ்க்லருந்து கோப்பி ஊத்திக் கொண்டு போயிக்குடுத்தேனா, அக்கா வீட்டுக்கு வெலக்காம், வெள்ளிக்கெழம, வௌக்கேத்தி, ஊதுவத்தி கொளுத்தி வச்சுப் பூப் போட்டுருடின்னாங்க. சரிதாங்க்கான்னுட்டுக் குளிக்கப் போனப்ப, மணி குளிச்சிருச்சு.

நாங் குளிச்சிட்டு, ஃப்ரிட்ஜ்ல வச்சிருந்த பூவ சாமிக்கித்தான் போடத்தான் போனாக்க, எங் கண்ணு ரெண்டுங் கிறுக்காப் போச்சோன்னு வெலவெலத்துக்கிட்டு வந்திருச்சு. பெரியண்ணே வீட்லதான் இருக்காங்கன்ற விசயமே அப்பத்தாந் தெரியும் எனக்கு. விபூதிப் பட்டைய நெஞ்சுல பூசிக்கிட்டு கையில சூடத் தட்டோ ட அண்ணே நிக்க, ஈரத் தலையில துண்டக் கட்டிக்கிட்டு, எனக்கிட்ட மாரிக்கே, ரவிக்கையத் தெறந்து மாரக் காட்டிக்கிட்டு நிக்கிது மணி. கண்ணு மூக்கெல்லாம் அடச்சிக்கிட்டு வந்தாலும், அப்பவும் வாயி மட்டும் பேச வந்துச்சு எனக்கு.

அடி மூள கெட்ட முட்டாச் சிறுக்கி, இங்கிட்டு வான்னு போயி கையப் புடிச்சுத் தரதரன்னு இழுத்துக்கிட்டு, ஸ்தோர் ரூம்புக்குக் கூட்டிப் போயி, ஒரு மண்ணுந் தெரியாத மண்ணாங்கட்டியா இருக்கியே, ஒன்னைய என்னன்னுதான் வளத்தாங்க, ஆம்பளக்கிட்டப் போயி அவுத்துக்காட்டலாமா? அண்ணே என்னதான் அப்பா மாரிக்கின்னாலும், ஒங்கப்பாட்டக் காட்டுவியா?

இந்தா இதத் தேயின்னு சொல்லிக் கோடாலித் தைலத்தக் கையில குடுத்தேன். வெறிச்சுப் பாத்துக்கிட்டுப் பேசாம நிக்கிது மணி. அதுக்குக் கழுத்து வலி வந்தப்ப, நாந்தான் தேச்சுவிட்டேன். ஆனா இப்ப, அங்கன போயி நா என்னன்னு தேய்க்கிறதுங்கிறேன். அசையாம நிக்கிது. அக்கா மட்டும் அங்கன வந்திருந்தா ஒந் தோல உருச்சு உப்புக் கண்டம் போட்ருப்பாங்க. இனிமேல்பட்டாவது தெரிஞ்சிக்க, இப்டியெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொல்லிக் கில்லிக் குடுத்திட்டு வெளிய வந்தா, இன்னம் படபடங்குது எனக்கு.

சாய்ந்திரம் அக்காட்டச் சொல்லிட்டு, பேங்குக்குப் போயி ஊருக்குக் காசனுப்பிப்புட்டு, லிட்டிலிந்தியா எம்மார்ட்டில எறங்கி, ஓடையோரமா நடந்து வரையில, பச்சமண்ணு, பத்துப் பன்னண்டு வயசிருக்கும், நாலஞ்சு சின்னப் பயல்கள், மலாய், சீனப் புள்ளைகளோட, நம்ம பயல்களும் தான் ரெண்டு, கஞ்சாக் குடிச்சுப்புட்டுக் கவுந்து கெடந்துச்சுக. இங்கெ அது கஞ்சா இல்லையாம் எக்டஸியாம், அண்ணெங்கிட்டக் வைரக்கல்லு எடுத்துட்டுப் போயி விக்கிறதுக்கு வர்ற செந்திவேலு சொன்னுச்சு. இங்கன வச்சே இதோட ரெண்டு மூணு தரவ ஆயிப்போச்சு, பொலிஸ்காரவுக வந்து கஞ்சாக் குடிக்கிற இளவட்டப் புள்ளைகளப் புடிச்சுக்கிட்டுப் போறது. பாக்கப் பாக்க, நெஞ்சப் போட்டு ரொம்பப் பெசைய, பத்து வெள்ளிக்கிப் போன் கார்டு வாங்கி முழுக் கார்டையும் ஊருக்குப் பேசிப் பேசித் தீத்துப்புட்டு வீட்டுக்குப் போனேன்.

வீட்டத் தெறந்துக்கிட்டு உள்ளாற போனாக்க, வெறிச்சோன்னு கெடக்கு. ஒட்டுக்க ஒருத்தரையுங் காணொம். சரி, அண்ணே வந்துருக்கதுனால, வைரக்கல்லு புதுசாக் கொண்டாந்துருப்பாங்களே, அத நிறுத்து அடுக்கி வெச்சிருவொம்னு ஆபீஸ் ரூம்புக் கதவத் தொறந்து உள்ள போனாக்க, அண்ணே அவுக எடத்துல, நாக்காலில ஒக்காந்து அண்ணாக்க விட்டத்த வெறிச்சிக்கிட்டிருக்காங்க. "இஞ்சித் தே போட்டுக் கொண்டாரவாண்ணே"ன்னு கேக்கவும், அப்பத்தான் நிமுந்து என்னையைப் பாத்துப்புட்டு, அப்டியொரு கத்துக் கத்துனாங்க பாருங்க, "போ வெளிய!"ன்னு, ஆடி போயிட்டேன் ஆடி! அண்ணே அதிந்துகொடப் பேசமாட்டாங்களே, யேன் இப்பிடிக் கோச்சுக்கிட்டாங்கன்னு நடுங்கிப்போயிட்டேன்.

சுதாரிச்சிக்கிறதுக்குள்ள, மணி எந்திரிக்கிது அண்ணெ ஒக்காந்திருந்த மேசைக்கி அடியில இருந்து. மோப் போடுற கம்பக் கையில புடிச்சிக்கிட்டு, வெளில எந்திரிச்சு மேசையத் தொடைக்க ஆரம்பிச்சிருச்சு.

தட்டித் தடுமாறி வெளிய வந்து அடுப்பங் கரைக்குள்ளப் போயிட்டேன். அண்ணெ எந்திரிச்சிப் போனவொடன தொடைக்காம, இப்பிடி காலுக்குள்ள நொழஞ்சிக்கிட்டுப் போனதுதான் அண்ணனுக்கு அப்பிடிக் கோவம் வந்திருக்கும், இப்பிடி எசகுபெசகாவே பண்ணிக்கிட்டிருந்தா என்னத்துக்கு ஆகப் போகுதோன்னு வாய்க்குள்ளயே பேசிக்கிட்டு, கிரைண்டருல அரிசிய அள்ளிப் போடையில, வெளியில என்னமோ வாங்கப் போயிருந்த பெரியக்கா வந்துட்டாங்க.

நாத்தனாவுட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்த சின்னக்காவோட ஒரு மாசம் இருந்துட்டு வரலாம்னுட்டு ஊருக்குக் கௌம்பிக்கிட்டிருந்தாங்க பெரியக்கா. பெரியண்ணே வேலையப் போட்டுட்டு இப்பவே வர முடியாது. கல்யாணத்துக்கு மொத நாளு, நேரடிப் பிளேன்ல திருச்சில எறங்கி வந்துர்றேன்னு சொல்லி வழியனுப்பி வச்சாங்க அக்காவ. நடுச்சாமப் பிளேனுக்குப் பொறப்புட்டவுங்களக் கௌப்பி யேத்தி வுட்டுப்புட்டு வந்த பெறகு மணிக்கிட்ட ஒண்ணுங் கேட்டுக்கல நா, படுத்துத் தூங்கிட்டேன்.

காலைல எந்திரிக்கிறப்பப் பக்கத்துல மணியக் காணோம். அப்பறமா அண்ணே ரூம்புக் கதவத் தெறந்துக்கிட்டு வந்து என்னமோ மாத்தரையப் போட்டுச்சு மணி.

அதென்னத்துக்கு மாத்தரைங்கிறேன், புள்ள உண்டாகிறாம இருக்கன்னு சாதாரணமாச் சொல்லிப்பிட்டுக் குளிக்கக் கௌம்புச்சு.

அடிக் கூறு கெட்டக் குருட்டுக் கும்பாயி, நீ என்ன செய்யிற, ஏது செய்யிறன்னு, என்னமாச்சும் தெரியுமா ஒனக்குன்னு உலுக்குறேன், "அண்ணே யாரு?"ன்னு கேட்டுச்சு மணி.

நாந் திருதிருன்னு முழிக்கவும், "அண்ணே ஒனக்கு யாரு?"ன்னு மறுவடி கேட்டுச்சு மணி "பொஸ்"ன்னேன்.

"அப்ப, நா ஒனக்கு மேடம்!"னு அது சொன்னப்பக் கூடப் பேசுனேந்தான்.

அது பாட்டுக்குக் குளிக்கப் போயிருச்சு. நாந்தான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணலாமாக் கிண்ணலாமான்னு பொலம்பிக்கிட்டு இருந்தேன்.

அப்பறமும் பேசிக்கிட்டுத்தான் இருந்திருப்பேன், ஆனா அண்ணே பசியாற வந்து மேசையில ஒக்காந்துக்கிட்டு, என்னைய இட்லியக் கொண்டாரச் சொன்னப்ப, வேகுவேகுனு வந்துச்சே மணி, "என்ன, என்னையவிடத் தோலு செவப்பாயிருக்காளேன்னு அவளக் கூப்பிட்டிங்களா, இனிமே கூப்புடுவிங்களா?"ன்னு அண்ணனக் கேட்டப்பக்கூட நல்லா வாயில வந்திருச்சு பேச.

ஆனா, திரும்பிக்கிட்டு என்னையப் பாத்து, "இப்டித் தளுக்கிக்கிட்டுப் பரிமார்ற வேலைய நிப்பாட்டிக்க, அண்ணனுக்கு என்ன வேணும்னாலும் எங்கிட்டக் கேட்டுக்குவாரு, உள்ள போயி ஒன் வேலையப் பாரு"ன்னு சொன்னுச்சு பாருங்க மணி, அந்த நிமிசந்தான் பேச்சு செத்துப் போச்சு எனக்கு. எல்லாரையும் நம்மள மாரிக்கே நெனச்சிக்கிறோம். நம்மன்னு சொல்ல நெனப்பு வந்தாலும், வாயி வரல. அடச்சிப் போச்சு அன்னைக்கோட.

அப்பறம் ஒரு நாள் செந்திவேலு வந்தப்ப, செருப்பு அந்து போச்சுன்னு, தூக்கிட்டுப் போய்த் தச்சுட்டு வரச் சொல்லி மணி சொல்ல, கோவத்துல எகிறுன செந்திவேலுகிட்ட, "நீ கையப் புடிச்சி இழுத்தையின்னு அண்ணெங்கிட்ட சொல்லிரு வேன்"னு மணி சொல்ல, செந்திவேலு வந்து எங்கிட்ட, இத அண்ணெங்கிட்ட சொல்லுங்கக்கானு பொருமுனப்பவும் நா பேசல.

ஒரு மாசமா, அண்ணனும் வெளியூரு வியாபாரத்துக்குப் போகாம இருந்தப்ப, "இத்தன நாள் பெரியவரு சிங்கப்பூர்ல தங்குனதில்லையே, வெளிநாடுகள்லே சுத்திக்கிட்டு இருப்பாரே, என்ன ஆச்சு?"ன்னு பக்கத்து வீட்டு மைமூன் ஆன்ட்டி ப்ளோக்குக்குக் கீழ நாய்க்குட்டிய வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போறப்பப் பாத்துக் கேட்டப்பவும் நா பேசல. அவுங்களச் சக்கர நாக்காலில வச்சுத் தள்ளிக்கிட்டு வந்த மணியோடக் கூட்டாளி சிறீலங்கா மீனு "மணிய எங்க இப்ப வெளிலே பாக்க முடியல?"னு கேட்டுக்கிட்டே நின்னப்பவும் நா ஒண்ணும் பேசிக்கல.
மணி, காதுக்கு, மூக்குக்கு, காலுக்குன்னு தங்கமா வாங்கிச் சேத்ததையும் பணமா வாங்கி ஊருக்கு அனுப்புனதையும் கவனிச்சிட்டு, "எப்டிக்கா?"ன்னு செந்திவேலு கேட்டப்பவும் நா பேசல.

கல்யாணங் கில்யாணமெல்லா முடிஞ்சு, மொத்தக் குடும்பமும் திரும்பி வந்த பெறகு, அக்கா சொல்ற வேலையச் செய்யாம மணி எடக்கு மொடக்கா நடக்கவும் அக்கா அடிக்க வரவும் மணி தடுத்து அக்கா கையப் புடிக்கவும் தெனந்தெனம் சந்தக்கடையாக் கெடந்தப்பவும் நா பேசல.

"இவளுக்கென்னடி வந்துச்சு?"ன்னு அக்கா கூப்புட்டு என்னையக் கேட்டப்பவும் பேசல. ஏஜன்ட்டக்காவுக்குப் புகார்ப் போயி, ஊருக்கு அனுப்பச் சொல்லவும் அந்தக்கா எனக்குப் போன் போட்டு விசாரிச்சப்பவும்
நா ஒண்ணும் பேசிக்கல.

யாருக்குந் தெரியாம, மணி நடுராத்திரியில போன் போட்டு, அமெரிக்காவுல இருந்த அண்ணெங்கிட்ட அழுதுக்கிட்டே விசயத்தச் சொல்லவும், அண்ணே என்னையக் கூப்புட்டுக் கேட்டப்பவும் நா பேசிக்கல.

அண்ணே வந்ததும் வராததுமா, "மனுசிய மனுசியா நடத்தக் கத்துக்குங்க மொதல்ல"ன்னு குதிகுதின்னு குதிச்சு, "அத ஊருக்கு அனுப்பனுமா, அனுப்பிருவோம், ரெண்டு பேரையுமே அனுப்பிருவோம், இதோட சரி, வேற ஒரு மெய்ட்டும் வேலைக்கு எடுக்கமாட்டேன். வரவுங்களப் பூராக் கொடுமப் படுத்திறிங்க. நாளையிலேருந்து வீட்டு வேலையெல்லாம் வீட்டுப் பொம்பளைங்க நீங்க ரெண்டு பேருமே செய்யிங்க"ன்னு சத்தம் போடவும், கப்புச் சிப்புனு அடங்கிப் போயிட்டாங்க அக்கா ரெண்டு பேரும். அப்பறம் அவுங்களும் ஒண்ணும் பேசல அண்ணெங்கிட்ட.

சின்னக்கா மறுவடி உண்டாயி வந்திருக்கும் போல. வாந்தியெடுத்து வச்சத சுத்தம் பண்ண மணியக் கூப்புட்டப்ப, பாத்தரத்தப் போட்டு உருட்டிக்கிட்டே, "இவ வரிசையாப் புள்ளப் பெத்துத்தள்ள, நம்மளா பொணை?"ன்னு எங்கிட்ட மணி கேட்டப்பவும், அது தானே நம்ம வேல, அதுக்குத்தானே இங்கெ வந்திருக்கோம்னெல்லாம் நா பேசிக்கல. ஆனா மணியும் ஒரு நாள் வாந்தியெடுத்துச்சு. மாத்தர போடாம இருந்துருச்சான்னு கேட்டுக்கல நா. அப்ப அண்ணே மொரிஷியஸுக்குப் போயிருந்தாங்க. மணியால போன்ல புடிக்க முடியல அண்ணன. ஆனா மணிய போட்டோப் புடிச்சிருச்சி தம்பி. அந்த ஓவர்ஸ்டேயி ஆளுகூட ஒருநா மணி சிரிச்சிப் பேசிக்கிட்டிருக்கையில. அந்தப் போட்டோவ அண்ணனுக்கு அனுப்பிவுட்டு, அந்தாளுகூடத் தப்புத் தப்பாப் பேசிக் கிட்டிருந்துச்சுன்னு சொல்லிருச்சு தம்பி. அப்பவும் என்னையக் கூப்புட்டு அண்ணெங் கேட்டப்ப நா ஒண்ணும் பேசல. ஆனா அண்ணே மணிக்கிட்டப் பேசல.

மறுவடி மணி வாந்தியெடுத்த அன்னைக்கி அக்கா பாத்துட்டாங்க. புடிச்சி இழுத்துக்கிட்டு எங்கயோ வெளியில போனாங்க. திரும்பி வந்து ரூம்புக்குள்ள வச்சு, கன்னத்துல அறஞ்சு அறஞ்சு "சொல்லுடி சொல்லுடி"னு தொண்டத் தண்ணி வத்தக் கத்துனாங்க அக்கா. அன்னைக்கி சாய்ந்திரந்தான் மணி காணாமப்போச்சு.

ஆளுக்கொரு பக்கமாத் தேடித் திரியையில, ப்ளோக்குக்குக் கீழ வெளையாட்டுத் தெடலுக்குப் புள்ளைங்களக் கூட்டிக்கிட்டு வந்த மெய்ட்டுகள் ஒரு பக்கமாக் கூடி, அவுங்கவுங்க அக்காக்கள் எப்டியெப்டிக் கொடுமப் படுத்துறாங்கன்னு பேசிக்கிட்டிருந்தாங்க. அக்காக்கள் ஒரு பக்கமாக் கூடி அவுங்கவுங்க மெய்ட்டுகள் பண்ற திமிர்த் தனத்தையும், மெத்தனத்தையும் வெலாவாரியாப் பேசிக்கிட்டிருந்தாங்க. நா பேசல.

மணியக் கண்டுபுடிக்க முடியல. ஏஜன்ட்டக்காவும் காணம்னு போனடிச்சுச்சு. பொலிஸ்காரங்கக்கிட்டச் சொல்லியாச்சாம். பர்மிட்ட ரத்து பண்ணனும்னுச்சு. ஒரு மாசம் வரைக்கிக் காணம்னா டெபாசிட்டுக் கட்டுன பணம் ஐயாயிர வெள்ளியும் போயிரும்னுச்சு. அக்கா பல்லக் கடிச்சுக்கிட்டு யோசனையா, "பணம் போனாப் பரவால்ல, சம்பாரிச்சுக்கலாம்...

ஆனா..."ன்னுட்டு வச்சுட்டாங்க ஃபோன.

என்னென்னமோ கேட்டுக்கிட்டே இருந்தாங்க என்னைய. நா ஒண்ணும் பேசல. அண்ணனும் ஒண்ணும் பேசல.

விசயமெல்லாம் தெரிஞ்சுபோன ஒருத்திய வேலைக்கி வச்சுக்கச் சங்கட்டமா இருந்துருக்கும். என்னையும் ஊருக்கு அனுப்பிருவமான்னு பேசிக்கிட்டாங்க.

அப்பவும் நா பேசல. அனுப்புனாத்தான் என்ன, செத்தா போயிரப்போறொம். அப்பா ஆளுங்கட்சித் தொண்டராயிருந்தவரு.

அரசாங்கச் சட்டத்தையெல்லாம் ரொம்ப மதிச்சவரு. அதான், எப்படாப்பா எனக்குப் பதினெட்டு வயசாகும்னு பாத்துக்கிட்டேயிருந்து, படக்னு கல்யாணங் கட்டிக் குடுத்தாரு. அந்தாளோட அஞ்சு வருசம் குடும்பம் நடத்தி, ரெண்டு புள்ளையும் பெத்து வளத்துக்கிட்டு, மளிகக் கடையும் நடத்திக்கிட்டிருந்தப்ப, கடல உருண்டக்காரியோட அந்தாளப் பாத்த அன்னக்கி, அப்பவே ச்சீப் போடான்னு துப்பிப்புட்டுப் புள்ளைங்களக் கூட்டிக்கிட்டுத் தனியா வந்துட்டேன்.

பொம்பளைய ஆம்பள வெறும் ஒடம்ப மட்டும் பாத்து, எவளோடையும் என்னமும் பண்ணிப்புடுறானேன்னு நெனச்சப்ப,

அப்பவே ஒடம்பு செத்துப் போச்சு. ஆனா வாயி செத்துப் போகல அப்பவும். பேசிப் பேசிக்கிட்டே பொழப்பையும் பாத்துக்கிட்டேன். ஆனா அஞ்சு வருசங் கழிச்சு, இந்த இருவத்தெட்டு வயசுல வாயுஞ் செத்துப் போச்சு. ஆனா புள்ளைங்கள ஆளாக்குறதுக்காகப் பொழைக்க வந்த எடத்துல பொறுத்துத்தானே போகனும்.

எம்மார்ட்டிய விட்டு எறங்கி அந்த ஓடையோரம் நடக்கிறப்பவெல்லாம், அங்கன கஞ்சாக் குடிக்கிற பச்சப் புள்ளைகளப் பாக்கும்போது அடிவயிறு பகீர்னு கலங்கிக்கிட்டு, அஞ்சாப்புப் படிக்கிற பயலையும் மூணாப்புப் படிக்கிற சிறுசையும் பக்கத்துலே இருந்து வளக்கணுமோன்னு தோணுது. பக்கத்துலே இருந்து வளத்துட்டா மட்டும்னும் தோணுது. அம்மா நல்லாத்தான் வளத்துக்கிட்டு வருது இப்ப. பின்னாடி, முக்கித்தக்கிப் பத்தாப்பு படிச்சுப்புட்டு இங்கெ வந்து, இப்பிடி மெய்ட்டாவோ வெயில்லயும் மழையிலயும் காங்கிரீட்டுக்குக் கம்பிக் கட்டி வேகவோ, ஏமாந்து கள்ளக்குடியேறியா உயிரக் கையில புடிச்சிக்கிட்டு ஒளிஞ்சு திரியவோ புள்ளங்கள அனுப்புறதவிட, எட்டத்துல இருந்தாலும், அதுகள நல்லாப் படிக்க வச்சிரணுமேன்னுதானே பல்லக் கடிச்சிக்கிட்டு இங்கெப் பொழப்ப ஓட்டிக்கிட்டிருக்கேன்.

இப்பப் புடிச்சு ஊருக்கு அனுப்பிப்புட்டா, பொழப்புக்கு வேற என்ன செய்யலான்னு யோசிச்சிக்கிட்டிருக்கையிலயே, ஏஜன்ட்டக்கா போன் அடிச்சுச்சு. மணியப் புடிச்சிட்டாங்களாம்.

அதுவுட்டுப் பொட்டி படுக்கையெல்லாம் தூக்கிக்கொண்டேய் குடுத்துட்டு வரச் சொன்னாங்க. போனப்ப, ரூம்புக்குள்ள அசிங்க அசிங்கமாத் திட்டிக்கிட்டிருந்துச்சு ஏஜன்ட்டக்கா மணிய. திருப்பிக்கிட்டு வம்படியா அண்ணெங்கிட்டப் பேசணும்னு கத்திக்கிட்டும் பொருமிக்கிட்டும், நேரம் போகப்போகக் கெஞ்சிக்கிட்டும் அழுதுக்கிட்டும் இருந்துச்சு மணி.

அக்கா வெளியில வந்து, ஒன்னைய ஊருக்கு அனுப்பிரச் சொல்றாங்க, வேற வீட்டுக்கு வேணும்னா பேசி மாத்திவுடவான்னு கேட்டுச்சு எங்கிட்ட. மறுபேச்சுப் பேசாம பொட்டியக் கட்டிக்கிட்டு, புது வீட்டுக்கு வந்திட்டேன்.

ரெண்டு பேரும் வேலைக்கிப் போறதுனால, புள்ளையப் பொறுப்பாப் பாத்துக்கனும்னாங்க புது அக்கா. தலையாட்டுனேன்.

ரெண்டு வருசத்துக் கொரு தரவதான் ஊருக்குப் போலாம்னாங்க. தலையாட்டுனேன். வெளியில போனாக்க, அக்கம் பக்கத்துல வாய் பாக்கக் கூடாது, வம்பு பேசக் கூடாதுன்னாங்க. நா மண்டைய மண்டைய ஆட்டுனேன். வாயே தெறக்கல.

என்னத்துக்கு?

3 commentaires:

said...
This comment has been removed by the author.
said...

மறுவாசிப்பின் போதும் தனது வாழ்வியல் வசீகரத்தை இழக்காமல் புதிய சில கீற்றுக்களைத் தரும் நல்ல சிறுகதை. படைத்தமைக்கு பாராட்டுக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

கூட இருந்துப் பார்த்த மாதிரியே எழுதியிருக்கீங்க..நல்லா இருக்கு.