வெட்டு
கூலிக்கி பதிலா
சம்பளம் கிடைச்சென்ன
பதிலுக்குக் கூலியா
பிய்யாரும் கிடைச்சென்ன?
ஐநூறு வெள்ளியாச்சும்
மினிமம் கிடக்கணுமாம்
கிடக்கிறதுக்கா உழைக்கிறது
அமயஞ்சமயத்துக்கு எடுத்துப்புட்டா
ரெண்டு வெள்ளி வெட்டிருது ஏட்டியெம்மு
ஓர்ச்சர்ட்டு ரோட்டுப் பக்கம்
லோரியத் திருப்பிப்புட்டா
திருப்பத்துக்கொண்ணா அது
விருப்பத்துக்கு வெட்டுது ஈயார்ப்பீ
ஏறும் போது தட்டிப்புட்டு
எறங்கும் போது மறந்துப்புட்டா
மொத்தமா வெட்டுது ஈஸிலிங்கு
உருப்படியா ரெண்டு
ஓவர்டைம் கிடைச்சா
அதுலயும் வெட்டுது சீப்பியெ·ப்பு
வெட்டாமக் கிட்டாம
சுளுவாப் பொறந்ததுக்கே
தங்கமாக் கொட்டணும்
தங்கச்சி மகனுக்கு...
நம்மால முடிஞ்சதுக்கு
மாமஞ் சீருக்கு
மோதிரம் வாங்கப்போனா
அஞ்ச வெட்டுது ஜீயெஸ்ட்டி
வந்து சேந்துச்சானு போனடிச்சா
மெல்லிசா இருக்காம் மோதிரம்...
லைன வெட்டுது தங்கச்சி
சிங்டெல்லு ஸ்டார்ஹப்பு
கரண்ட்டு கேபிளு
தண்ணிக்கி குப்பைக்கி
லொட்டுக்கு லொசுக்குக்குனு
பட்டுப்பட்டுனு வெட்டுது ஜைரோ
ஜீரோவுல கூட நிக்கல
மைனஸ்ல ஓடிக்கிட்டிருக்கு மாப்ள!
கிணத்த வெட்டணும்
கம்மாய வெட்டணுன்னு
கடுதாசி வந்திருக்குன்னு
அவசரமா அனுப்பணுன்னு
கைமாத்துக் கேட்டுப்புட்ட
குடுக்காமயா போயிருவம்?
நாளைக்கே...
நாலு நம்பர் அடிச்சுப்புட்டா!
Thursday, October 25, 2007
Publié par
சிவஸ்ரீ-----
à l'adresse
Thursday, October 25, 2007
Libellés : கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 commentaires:
விளிம்பின் அவலத்தை விளிம்பின் சொற்கள கொண்டு எழுதப்படுபவை மிகச் சொற்பம்..அவ்வகையில் இஃதொரு நல்ல முயற்சி..
நாலு நம்பரின் மூலமாய் நீங்கள் அடையாளாம் காட்டத் துணிந்தவை குறித்து மகிழ்வு...
Post a Comment