தள்ளிக் கொண்டு
குழந்தை நிரம்பிய
குட்டி வண்டியைத்
தள்ளிக் கொண்டு சில
தாய்மார்களும்
குப்பை நிரம்பிய
பெட்டி வண்டிகளைத்
தள்ளிக் கொண்டு சில
தொழிலாளர்களும்
வயதானவர் நிரம்பிய வண்டிகளைத்
தள்ளிக் கொண்டு சில
பணிப்பெண்களும்
விடுமுறைச் சுற்றுலாவுக்கு
வேறு நாடுகளுக்கு
பிள்ளைகளையும் பயணப் பெட்டிகளையும்
தள்ளிக் கொண்டு
குடும்பத் தலைவர்களும்
மாத்திரை கொடுத்தோ
வார்த்தைகள் கொடுத்தோ
வயிற்றில் கொடுத்தோ
தள்ளிக் கொண்டு வந்த
பள்ளிச் சிறுமியைக்
கட்டியணைத்தபடி ஒருகடுக்கன் காரரும்
ஆர்ஸனல் மேன்யூக் கனவுகளை
காலால் தள்ளிக் கொண்டு சில
பந்தாட்டச் சிறுவர்களும்
எதிர்த்த சாப்பாட்டுக் கடையிலிருந்து
பர்மிட்டில்லாக் கையில்
கரண்டி பிடித்து
தள்ளிக் கொண்டிருந்த
மீகொரிங்கைப் போட்டுவிட்டு
நாலாபுறமும் பாய்ந்து எகிறியோடுவோரும்
மாட்டியோரைக் குப்புறத் தள்ளிப்
புறமுதுகில் கைவிலங்கிட்டு
நெட்டித் தள்ளிக் கொண்டு சில
ஊதாச் சீருடைக் காவலரும்
ஒரு பழுப்புப் பூனையைத் தள்ளிக் கொண்டு
ஒருகருப்புப் பூனையும்
போய்க் கொண்டிருக்கிறார்கள்
காற்று தள்ளிக் கொண்டிருக்கும்
என் ஜன்னலின்
திரைச்சீலைக்குப் பின்னால்
வேலை கிடைக்கவில்லையென
வெட்டியாய் ஒரு நாளைத்
தள்ளிக் கொண்டு
வேடிக்கை பார்த்திருக்கும்
என்னைக் கடந்து...
Thursday, October 25, 2007
Publié par
சிவஸ்ரீ-----
à l'adresse
Thursday, October 25, 2007
Libellés : கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 commentaires:
குறிப்பிட்டுச் சொல்லமுடியாதபடி எல்லா
"தள்ளிக் கொண்டு" ம் அழகாக உள்ளன..
Post a Comment